26.7 C
Jaffna
December 10, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

• தேங்காய்ச் சோறு
• சுவரொட்டி கிரேவி
• காயம்
• பாச்சோறு
• மொளவு தண்ணி சூப்
• பொரிச்ச கறி

பிரசவித்த பெண்கள் மற்றும் பருவமடைந்த பெண்களுக்கு இஸ்லாம் மதத்தில் கொடுக்கப்படும் உணவுகள் இவை.

தேங்காய்ச் சோறு

தேவையானவை:

அரிசி – அரை கிலோ
தேங்காய் – ஒன்று (மீடியம் சைஸ்)
பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – 5 கிராம்
முழு பூண்டு – 1
சின்ன வெங்காயம் – 2
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
சாலியா – 10 கிராம் (சிவப்பு கலரில் சப்ஜா விதை போல இருக்கும்)
சதக்குப்பை (பெரிய சீரகம் போல இருக்கும்) – 10 கிராம்
பட்டைக் கருவா – 5 கிராம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டே கால் பங்கு பால் அளந்து வைத்துக் கொள்ளவும்). சாலியா, சதக்குப்பை, பட்டைக் கருவா, பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும் (முழுதாகவும் பூண்டுப்பல்லைச் சேர்க்கலாம்).

தேங்காய்ப்பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அரைத்து வைத்திருக்கும் சதக்குப்பை பேஸ்ட், வெங்காயம், பூண்டு, மஞ்சள்தூள், உப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கரைத்துக்கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். தேங்காய்ப்பால் நன்றாகக் கொதித்ததும் அரிசியைச் சேர்க்கவும். சாதம் பாதி வெந்ததும் அடுப்பைக் குறைத்து ‘தம்’ போடவும். சாதம் வெந்ததும் இறக்கவும்.

குறிப்பு: இந்த மருந்துச்சோறு பிரசவித்த உடம்புக்கு மிக நல்லது. ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் சுவையான, பாரம்பர்ய உணவு.

சுவரொட்டி கிரேவி

தேவையானவை:

சுவரொட்டி (மண்ணீரல்) – அரை கிலோ
நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6
தயிர் – 50 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு அரைக்க
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு – தலா 5
கசகசா – அரை டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
தேங்காய் – அரை பத்தை

செய்முறை:

அரைக்க வேண்டியதை விழுதாக அரைக்கவும். சுவரொட்டியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். நறுக்கும்போது உடையும். நிதானமாக நறுக்கவும். இதை குக்கரில் சேர்த்து இரண்டாக நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தயிர், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அரைத்து வைத்திருக்கும் முந்திரி விழுதைச் சேர்க்கவும். இதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அனைத்தையும் கலந்து கொள்ளவும். குக்கரை மூடி 2 விசில் விடவும். விசில் இறங்கியதும் குக்கரை திறந்து பார்க்கவும். கிரேவியில், தண்ணீர் இருந்தால் வற்றவிடவும். வற்றியதும் அதிலேயே நல்லெண்ணெய் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்துப் பொரிய விடவும். 10 நிமிடத்தில் நன்றாகப் பொரிந்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி விடலாம்.

குறிப்பு: சுவரொட்டி, பிரசவித்த பெண்கள், பருவமடைந்த பெண்களுக்கு ரத்த இழப்பை ஈடு செய்யும். சத்துக் குறைந்த குழந்தைகளுக்கும் இதைக் கொடுக்கலாம். இது இதயத்துக்கு வலு கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காயம்

தேவையானவை:

காயப்பொடி – 150 கிராம்
முட்டை – 15
கருப்பட்டி – ஒன்றரை கிலோ
சர்க்கரை – அரை கிலோ
கல்கண்டு, நெய் – தலா 200 கிராம்
பாதாம், முந்திரி – தலா 100 கிராம்
கசகசா – 25 கிராம்
நல்லெண்ணெய் – 150 கிராம்
முழு தேங்காய் – 4
பூண்டு – 150 கிராம்.
நெய் – தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் துருவி அரைத்து தலைப்பால், இரண்டாம் பால், மூன்றாம் பாலை தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும். முந்திரி, பாதாம், கசகசாவை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைக்கவும். தோல் உரித்து பூண்டுப்பல்லை வேகவைத்து, மிக்ஸியில் அரைத்து வைக்கவும். தேங்காய்ப்பாலின் இரண்டாம், மூன்றாம் பாலில் கருப்பட்டியை நன்கு பொடி செய்து போட்டுக் கொதிக்க விட்டு மண் வராமல் வடித்துக் கொள்ளவும். தலைப்பாலில் முட்டைகளை நன்கு அடித்து கலக்கி வடித்து வைக்கவும்.

கனமான அடிப்பகுதி உள்ள அகன்ற சட்டியில் காயப்பொடி, அரைத்த முந்திரிக் கலவை, சர்க்கரை (சீனி), கல்கண்டு, எண்ணெய், நெய் மற்றும் வேகவைத்து அரைத்த பூண்டு, வடிகட்டிய கருப்பட்டிக் கரைசல், முட்டை கலந்த தலைப்பால் ஆகியவற்றைச் சேர்க்கவும். இவற்றை நன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை நன்கு சுண்டி தேவையான பதத்துக்கு (அல்வா பதம்) வரும்போது இறக்கி விடவும்.

குறிப்பு: தேங்காய்ப்பாலில் இரண்டாம், மூன்றாம் பால் எடுக்கும்போது குறைவாக எடுத்தால் போதும். தண்ணீர் கூடினால் அடுப்பில் அதிக நேரம் வைக்க வேண்டி இருக்கும். காயப்பொடி தூத்துக்குடிப் பகுதிகளில் கிடைக்கும். காயம் சாப்பிட்டால் தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். இந்தக் காயம் மருந்து குழந்தை பெற்ற பெண்கள், வயதுக்கு வந்த பெண்களுக்கு மிக நல்லது, கர்பப்பையை வலுப்படுத்தும்.

‘காயம்’ ரெசிப்பியில் சொல்லப்பட்டிருக்கும் ‘காயப்பொடி’யை தயாரிக்கும் முறை 

தேவையானவை:

சுக்கு – 100 கிராம்
வாய்விலங்கம் – 50 கிராம்
ஓமம் – 50 கிராம்
கருஞ்சீரகம் – 5 கிராம்
கடுக்காய் – 5 கிராம்
புழுங்கல் அரிசி – 50 கிராம்
சீரகம் – 5 கிராம்
சோம்பு – 5 கிராம்
சாலியா – 5 கிராம்
சதகுப்பை – 5 கிராம்
கசகசா – 5 கிராம்
ஜாதிக்காய் – 5 கிராம்
ஜாதிப்பூ – 5 கிராம்
மஞ்சள் – 5 கிராம்
வெந்தயம் – 5 கிராம்
மிளகு – 5 கிராம்
வால்மிளகு – 5 கிராம்
பெருங்காயம் – 5 கிராம்

செய்முறை:

இவை அனைத்தையும் வெயிலில் காயவைத்து, மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் காயப்பொடி ரெடி.

பாச்சோறு

தேவையானவை:

பொன்னி அரிசி (சன்ன ரகம்) – 500 கிராம்
பெரிய தேங்காய் – 4
ஒயிட் எசன்ஸ் – ஒரு மூடி/5 மில்லி
சர்க்கரை – 2 கிலோ
முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 50 கிராம்
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

முந்திரி, பாதாம், பிஸ்தாவை ஊற வைத்து தோல் நீக்கி நீள ஸ்லைஸாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்களை துருவிக்கொள்ளவும் (அடிப்பகுதியில் இருக்கும் பிரவுன் நிறம் வரும் வரை துருவ வேண்டாம்). கனமான அடிப்பகுதியுள்ள சட்டியை அடுப்பில் வைத்து அரிசியைக் கழுவி, அரை வேக்காடு வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் விடும். கலவை நன்றாகப் பொங்கி வரும் போது அதில் வரும் நுரையைக் கரண்டியால் எடுத்து விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். நன்றாக பாகு பதம் வந்ததும் நறுக்கி வைத்துள்ள முந்திரி, பாதாம், பிஸ்தா தூவி அடுப்பை அணைக்கவும். இறக்கும்போது எசன்ஸைச் சேர்க்கவும். இறக்கியதும் மூடியால் மூடக் கூடாது, வேர்த்து தண்ணீர் விடும். அதற்குப் பதில் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியால் கட்டி வைத்து விடவும். ஒரு மணி நேரம் கழித்துப் பரிமாறலாம்.

மிளவு தண்ணி சூப்

தேவையானவை:

வெள்ளை சுதும்பு மீன் – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க:
சோம்பு, சீரகம் – அரை டீஸ்பூன்
தேங்காய் – ஒரு பத்தை
மிளகு – ஒன்றரை டீஸ்பூன்
தனியா – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4
பூண்டு – 5 பல்
அரைக்க வேண்டியதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். விழுதாக அரைக்கத் தேவையில்லை.

செய்முறை:

மீனைக் கழுவி வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்திருக்கும் கலவையை இதில் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் மீனைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைத்து வேக விடவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இதே முறையில் முட்டை சேர்த்தும் செய்யலாம். அதாவது குழம்பு கொதித்ததும் நான்கு முட்டையை உடைத்து ஊற்றவும். 5 நிமிடம் சிம்மில் வைத்து முட்டையை வேக விடவும். பின் முட்டையை கரண்டியால் மெதுவாக விலக்கி விடவும். மேலும் ஐந்து நிமிடம் வேகவிட்டு சூப் கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு: குழந்தை பெற்ற பெண்கள் தினமும் இந்தச் சூப்பை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

பொரிச்ச கறி

தேவையானவை:

மட்டன் – அரை கிலோ
தயிர் – 4 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
தேங்காய் விழுது – 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4 (இரண்டிரண்டாக நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது
ரம்ப இலை – 1
உப்பு- தேவையான அளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 1 டீஸ்பூன்
எண்ணெய்/நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் குக்கரில் ஒன்றாகச் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் வரை வேக விடவும். பின்னர் மூடியைத் திறந்து, தண்ணீர் இருந்தால் வற்ற விடவும். இதில் 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறவும். எண்ணெய் ஊற்றுவதால், இதற்கு ‘பொரிச்ச கறி’ என்று பெயர்.

குறிப்பு: பிரசவித்த பெண்களுக்கும், பெரியவர்களுக்கும் தெம்பு வருவதற்காக கொடுக்கப்படும் ரெசிப்பி இது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

பிறப்புறுப்பில் உள்ள முடிகளை நீக்குவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும்?

Pagetamil

Leave a Comment