ருவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியிருக்கிறார் உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா என்ற பெரும் நிறுவனங்களுடன் இப்போது ருவிட்டரையும் தனது பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கிறார் தொழில்துறை ஜாம்பவான், உலகப் பணக்காரர் எலான் மஸ்க்.
கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டொலருக்கு ருவிட்டரை வாங்குவதாக அறிவித்தார் எலான் மஸ்க். அதன் பின்னர் ருவிட்டரை வாங்கவில்லை என்று அறிவித்தார்.
இதை தொடர்ந்து ருவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட, மீண்டும் இல்லை, இல்லை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினா.
இந்நிலையில் தான் நேற்று (வியாழக்கிழமை) அவர் ருவிட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கைகழுவும் தொட்டியை தூக்கிக் கொண்டு சென்றார். அந்த வீடியோவை ருவிட்டரில் பகிர்ந்த அவர் அதற்கு தலைப்பு வைத்திருந்ததில் பல உள் அர்த்தங்கள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
‘நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன். அது மூழ்கட்டும்’ என்று பதிவிட்டிருந்தார். Let that sink in! என்ற அவருடைய ருவீட் பணக்காரத்தனத்தின் உச்சம் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது
இந்நிலையில், ருவிட்டர் நிறுவனத்தை வியாழன் பின்னிரவில் அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ருவிட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது.
அவர் மட்டுமல்ல ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார்.
இதனை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஆனால் எலான் மஸ்க் தரப்போ, ருவிட்டர் தரப்போ இதுவரை இந்த பணி நீக்கங்களை உறுதி செய்யவில்லை.
முன்னதாக எலான் மஸ்க் தனது ருவிட்டர் பக்கத்தில் தான் ஏன் ருவிட்டரை வாங்குகிறேன் என்பதற்கான விளக்கம் அளித்திருந்தார். அதில், “ருவிட்டரை வாங்குவது முக்கியமானது. ஏனெனில் ஒரு பொதுவான டிஜிட்டல் தளம். எல்லோருடைய கருத்துகளையும், நம்பிக்கைகளையும் பகிர்ந்து, ஆரோக்கியமான முறையில் விவாதிக்க ஒரு தளம் தேவை” என்று பதிவிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் ருவிட்டர் தலைமையகத்தில் காஃபி பார் ஒன்றில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.
ஊழியர்கள் அச்சம்
ஏற்கெனவே ருவிட்டர் மஸ்க் கைவசம் வந்த பின்னர் அவர் இப்போது இருக்கும் ஊழியர்களில் 75% பேரை பணிநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் ஊழியர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பெயர் குறிப்பிடாமல் பேட்டியளித்த ஊழியர்களில் சிலர், “எலான் மஸ்க்கின் தலைமையில் வேலை பார்க்க விருப்பமில்லாததால் நாங்கள் பணியிலிருந்து விலகிவிட்டோம்” என்றனர்.
இன்னும் சிலர், “இப்போதைக்கு எந்த கடினமான முடிவையும் எடுப்பதாக இல்லை. சந்தேகத்தின் பலனை அளித்து இன்னும் சில காலம் இங்கேயே பணியைத் தொடர்வோம்” என்று கூறினர்.
இதற்கிடையில், சமூக செயற்பாட்டாளர்கள் சிலர், “மஸ்க் ருவிட்டரை நடத்தினால் அதில் நம்பகத்தன்மையற்ற தகவல்களும், பல்வேறு அவதூறுகளும், தொல்லைகளும் அதிகரிக்கும்” என்று கவலை தெரிவித்துள்ளனர்.
யார் இந்த எலான் மஸ்க்?
விண்வெளி ஆராய்ச்சிக்கான மலிவு விலை ரொக்கெட்களைத் தயாரிக்கும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியவர் எலான் மஸ்க். அதோடு, கனரக மின்வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்தையும் அவர் விலைக்கு வாங்கினார். இவ்விரு நிறுவனங்களிலும் அவர் பணத்தை முதலீடு செய்து லாபம் ஈட்டுகிறவர் மட்டுமல்ல. ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரொக்கெட்களின் தலைமை வடிவமைப்பாளரும் அவர்தான். டெஸ்லாவிலும் பல்வேறு மேம்பட்ட வசதிகளை உள்ளடக்கிய புதிய மொடல் கார்களின் வடிவமைப்பில் சி.இ.ஓ. மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளரான அவருக்கு முக்கியப் பங்குள்ளது.
இப்படிப் பல நிறுவனங்களைத் தொடங்கியும் விலைக்கு வாங்கியும் விண்வெளி ஆராய்ச்சி, வாகன உற்பத்தி, சூரியசக்தி மின்கலன் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு, சுரங்க வடிவமைப்பு, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து, உலகின் மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்திருக்கிறார் எலான் மஸ்க்.
மனித குலத்தை அனைத்துத் துறைகளிலும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நகர்த்திச் செல்லும் வேட்கை, தடாலடி முடிவுகளை எடுக்கும் துணிச்சல், பலரால் நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயங்களை முடித்துக் காட்டும் திறமை ஆகியவற்றால், உலகின் செல்வாக்கு மிக்க தொழிலதிபராகவும் மிகப் புகழ்பெற்ற ஆளுமையாகவும் உயர்ந்திருக்கிறார் எலான் மஸ்க்.
கருத்துச் சுதந்திரம்..?
ருவிட்டரைக் கைப்பற்றிய பிறகு, அதில் பிரதானமாக மூன்று மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக ஏற்கெனவே சொல்லி வந்தார் எலான் மஸ்க். ட்விட்டரில் கருத்துரிமை பேணப்படவில்லை என்பது மஸ்க்கின் முதன்மையான குற்றச்சாட்டு. உண்மைக்குப் புறம்பான தகவல்கள், ஆதாரமற்ற அவதூறுகள், வசைகளை உள்ளடக்கிய ருவீட்களைப் போலியானவை என்று அம்பலப்படுத்துதல் மற்றும் அவற்றைத் தொடர்ந்து வெளியிடும் ருவிட்டர் கணக்குகளை முடக்குதல் உள்ளிட்ட தணிக்கை நடவடிக்கைகளை ருவிட்டர் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இந்த வகையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ருவிட்டரிலிருந்து நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டுள்ளார். ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக இல்லாத எந்த ஒரு கருத்துக்கும் ருவிட்டரில் இடமளிக்கப்பட வேண்டும் என்கிறார் மஸ்க். கருத்து/பேச்சு சுதந்திரத்தின் முற்றுமுழுதான ஆதரவாளர் என்று தன்னை முன்வைக்கிறார்.
மேலும், பயனர்களுக்கு எந்தெந்த ட்வீட்களை முன்னிலைப்படுத்திக் காண்பிப்பது என்பதை முடிவுசெய்யும் அல்காரிதங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது, ஃபேஸ்புக் பதிவுகளுக்கு இருப்பதுபோல் ட்வீட்களைத் திருத்துவதற்கான எடிட்டிங் வசதியை அறிமுகப்படுத்துவது, நபர்கள் மூலம் அல்லாமல் மென்பொருள் மூலம் இயக்கப்படும் ருவிட்டர் பாட் (Bot) கணக்குகளை நீக்குவது, பிரபலங்களின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுவந்த நீல டிக் அங்கீகாரத்தைத் தனிநபர்களால் இயக்கப்படும் அனைத்து ருவிட்டர் கணக்குகளுக்கும் அளிப்பது உள்ளிட்ட பல மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.
மஸ்க் முன்வைக்கும் மாற்றங்கள் அனைத்துக்கும் நல்விளைவுகளும் உண்டு, தீய விளைவுகளும் உண்டு. கருத்துச் சுதந்திரத்துக்கு முற்றுமுழுதான ஆதரவு என்னும் பெயரில் ஆதாரமற்ற பொய்யான கருத்துகளையும் வசைகளையும் அனுமதிப்பது சமூகத்தில் தவறான தகவல்களைப் பரப்புவதோடு, தனிநபர்கள் மீதான தாக்குதல்களை இயல்பாக்கிவிடும். ஏற்கெனவே ருவிட்டரில் இவை அதிகமாக இருந்ததால்தான் ருவிட்டர் நிர்வாகம் தணிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்திவந்தது. அவற்றிலேயே பல போதாமைகள் இருப்பதாக ஜனநாயகச் சிந்தனையாளர்களும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் குற்றம்சாட்டிவருகையில், கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் இந்தத் தணிக்கை முறையை நீக்குவதோ மாற்றியமைப்பதோ நன்மையைவிடத் தீமையையே கொண்டுவரும் என்று அஞ்சப்படுகிறது.