அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. வேகம் மற்றும் பவுன்ஸ் ஆடுகளங்களில் இந்தத் தொடர் நடைபெற உள்ளதால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த ஆயத்தமாகி உள்ளனர். அதேவேளையில் மைதானத்தின் அளவு பெரிது என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் பங்களிப்பு செய்ய அனுகூலமான சூழ்நிலையும் உள்ளது.
இந்த வகையில் சூப்பர் 12 சுற்றில் கவனத்தை ஈர்க்கக்கூடிய பந்து வீச்சாளர்களில் சிலர்…
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
சர்வதேச கிரிக்கெட்டாக இருந்தாலும் தொழில்முறை ரீதியிலான ரி20 லீக்காக இருந்தாலும் சரி ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் மதிப்புமிகுந்த வீரராக திகழ்கிறார். ரி20 மற்றும் ரி10 என அவர், உலக அரங்கில் சுமார் 20க்கும் மேற்பட்ட அணிகளில் விளையாடி வருகிறார். அணிகள் அவரை எந்த அளவுக்கு விரும்புகின்றன என்பதையே இது காட்டுகிறது.
71 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி உள்ள ரஷித் கான் 118 விக்கெட்களை வேட்டையாடி உள்ளர். ஓவருக்கு சராசரியாக 6.5 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். தனது பந்து வீச்சில் அதிக அளவிலான மாறுபாடுகளை காட்டும் திறன் கொண்டவர் ரஷித் கான். எனினும் தேசிய அணியில் சில நேரங்களில் குழுவின் அனுபவமின்மை ரஷித் கானின் திறனில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தானின் ‘வன் மேன் ஆர்மி’ என்றே அழைக்கப்படுகிறார் ரஷித் கான்.
மார்க் வுட் (இங்கிலாந்து)
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ரி20 தொடரில் 156 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி பிரம்மிக்க வைத்தார் இங்கிலாந்தின் மார்க் வுட். உலக கிரிக்கெட் அரங்கில் ஆடுகளத்தின் சமன்பாட்டில் இருந்து வேகத்தை பயன்படுத்திக் கொள்ளும் மிகச்சில வீரர்களில் மார்க் வுட்டும் ஒருவர். தனது வேகத்தால் மார்க் வுட் ரன்களை சற்று விட்டுக்கொடுத்துவிடுவது வாடிக்கை. ஓவருக்கு சராசரியாக அவர், 8.37 ரன்களை வழங்குபவராக உள்ளார். எனினும் ஒவ்வொரு 14 பந்துகளிலும் விக்கெட் கைப்பற்றுவராக இருப்பது பலம்.
மார்க் வுட்டின் பந்து வீச்சில் ரேம்ப் ஷாட்டில் சிக்ஸர் அடிக்கப்படலாம். இதனால் தேர்ட் மேன் பீல்டர் முக்கியத்துவம் பெறுவார்.
மேலும் மார்க் வுட்டின் பந்து வீச்சில் எல்லைக்கோட்டுக்கு அருகே கட்ச் செய்யும் நிகழ்வு எப்போதும் இருக்கும். ரொப் ஓர்டரில் இரு விக்கெட்களை சாய்ப்பதே மார்க் வுட்டின் நோக்கம். இதற்காக அவர், தனது 4 ஓவர்கள் கோட்டாவில் 35 முதல் 38 ரன்களை வழங்கினாலும் வருத்தப்படுவது இல்லை.
ஜோஷ் ஹேசில்வுட் (அவுஸ்திரேலியா.)
ஜோஷ் ஹேசில்வுட் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிரபலமற்ற ஹீரோவாக வலம் வருகிறார். பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் போன்று ஜோஷ் ஹேசில்வுட் விரைவாக செயல்படாவிட்டாலும் துடுப்பாட்டக்காரர்களுக்கு சிக்கல்களை உருவாக்கும் விதத்தில் செயல்படக்கூடியவர்.
டெஸ்ட் போட்டிக்கான நீளத்தில் பந்துகளை ஓஃப் ஸ்டெம்ப் பாதையை குறிவைத்து கூடுதல் பவுன்ஸுடன், போதுமான அளவில் தாமதமாக நகர்வை மேற்கொண்டு எந்த ஒரு துடுப்பாட்டக்காரர்களையும் தொந்தரவுக்கு உட்படுத்துவதே ஜோஷ் ஹேசில்வுட்டின் சிறப்பு.
37 ரி20 போட்டிகளில் விளையாடி உள்ள ஜோஸ் ஹேசில்வுட் சிக்கனமாக ஓவருக்கு 7.62 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். 4 முறை 4 விக்கெட்களை கைப்பற்றி உள்ள அவர், ஒட்டுமொத்தமாக 53 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.
லாக்கி பெர்குசன் (நியூஸிலாந்து)
ரி20 கிரிக்கெட் போட்டிக்காகவே பிறந்த வேகப்பந்து வீச்சாளர் என புகழப்படுபவர் நியூஸிலாந்தின் லாக்கி பெர்குசன். தீவிரமான வேகம், தொடர்ச்சியான ஆக்ரோஷம், எந்த வகையிலான ஆடுகளத்திலும் போதுமான மாறுபாடுகளை தனது பந்து வீச்சில் காட்டக்கூடியவர். தாழ்வான ஃபுல்டோஸ் பந்துகளை அதிவேகத்தில் வீசுவது பெர்குசனின் சிறப்பு. யோர்க்கர், அபாயகரமான பவுன்ஸர், ஷார்ட் பந்துகளில் மாறுபாடு, வேகம் குறைந்த கட்டர்கள் ஆகியவற்றிலும் அசத்தக்கூடியவர். 21 ரி20 போட்டிகளில் விளையாடி உள்ள லாக்கி பெர்குசன் ஓவருக்கு சராசரியாக 6.84 ரன்களை மட்டுமே வழங்கி உள்ளார். அவருடைய பலங்களில் ஒன்று சூழ்நிலையை தகவமைத்துக்கொள்வது. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் பட்டம் வென்றதில் லாக்கி பெர்குசன் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.
ஷாகீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்)
தற்போதைய கிரிக்கெட் உலகில் வேகப்பந்து வீச்சாளர்களின் ‘பட்டத்து இளவரசர்’ என வர்ணிக்கப்படுபவர் பாகிஸ்தானின் ஷாகீன் ஷா அப்ரிடி. மிக தீவிரமான முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸின் கால் பாதத்தை தனது கூர்மையான யோர்க்கரால் பதம் பார்த்தார். இதுவே காயத்துக்கு முன்பு அவர், விட்ட இடத்தில் இருந்து அசுர வேக பந்து வீச்சை தொடங்கியது பிரதிபலித்தது.
கடந்த ரி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை தனது முதல் ஸ்பெல்லிலேயே ஏறக்குறைய முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். எந்த அளவுக்கு அவரது பந்து வீச்சில் வேகம் இருக்கிறதோ, அதே அளவு ஸ்விங்கும் இருப்பது கூடுதல் பலம். ஷாகீன்ஷா அப்ரிடியின் பந்து வீச்சு வலது கை துடுப்பாட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.