உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் இராணுவ நடவடிக்கையை வழிநடத்த, புதிய இராணுவத்தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரைனிற்குள் தொடர் இராணுவப் பின்னடைவுகளை தொடர்ந்து, இந்த புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.
உக்ரைன் மீதான “சிறப்பு இராணுவ நடவடிக்கையின் கூட்டுப் படைகளின் தளபதியாக” ஜெனரல் செர்ஜி சுரோவிகின் நியமிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பெப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்தது. மோதலின் முதல் சில மாதங்களில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யப் படைகள் கைப்பற்றி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. ஆனாலும், கடந்த சில வாரங்களாக உக்ரைன் ஆரம்பித்துள்ள எதிர்த்தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் ரஷ்யப் படைகள் பின்வாங்க வேண்டியிருந்தது.
சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்கில் பிறந்த 55 வயதான சுரோவிகின், தஜிகிஸ்தான் மற்றும் செச்சினியாவில் 1990 களின் மோதல்களில் போர் அனுபவம் பெற்றவர். 2015 இல் சிரியாவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை பாதுகாக்க ரஷ்யா தலையிட்ட போது, சிரியாவிலும் பணியாற்றியுள்ளார்.
ஜூலை மாதம் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இப்போது வரை சுரோவிகின் உக்ரைனில் “தெற்கு” படைகளை வழிநடத்தினார்.
உக்ரைனில் ரஷ்ய பின்னடைவுகள் மூத்த தலைமையின் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. ரஷ்ய அரசியல் மற்றும் இராணுவத் துறைகளில் உள்ள உயரடுக்கு உறுப்பினர்களிடமிருந்தும் விமர்சனம் வந்துள்ளது.
செப்டம்பர் தொடக்கத்தில் உக்ரைனிய எதிர்த்தாக்குதலில் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தின் பெரும்பகுதியிலிருந்து ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்கின. உக்ரைனியப் படைகள் அதன் பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர்களைக் கைப்பற்றின.
ரஷ்ய துருப்புக்கள் தெற்கு கெர்சன் பகுதி மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள லைமன் போக்குவரத்து மையத்தையும் இழந்தன.