ஈரானில் பொலிஸ் காவலில் இளம் பெண் இறந்ததற்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன. நேற்று, வியாழனன்று ஈரான் முழுவதும் பல நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்தன. இரண்டு வார ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டதாகக் மனித உரிமைகள் குழுவொன்று கூறியது.
ஈரானிய குர்திஷ் நகரமான சாகேஸைச் சேர்ந்த மஹ்சா அமினி (22) இம்மாதம் தெஹ்ரானில் “பொருத்தமற்ற உடை”க்காக இஸ்லாமியக் குடியரசின் பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்தும் அறநெறிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
ஈரானில் 2019 இல் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களை, அரசு நசுக்கிய பின்னர், ஈரானில் தற்போது பெரியளவிலான போராட்டங்கள் நடக்கின்றன.
நோர்வேயை தளமாகக் கொண்ட குழுவான ஈரான் மனித உரிமைகள் குழு ட்விட்டரில், “(#IranProtests) குழந்தைகள் உட்பட குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு தரப்பின் கடுமையான அடக்குமுறை இருந்தபோதிலும், ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் தெஹ்ரான், கோம், ராஷ்ட், சனந்தாஜ், மஸ்ஜித்-இ-சுலைமான் மற்றும் பிற நகரங்களில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்ததைக் காட்டியது.
காவல்துறை அதிக எண்ணிக்கையிலான “கலவரக்காரர்களை” கைது செய்துள்ளதாக அரசு தொலைக்காட்சி கூறியது.
டஜன் கணக்கான ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. நேற்று (29) வரை பாதுகாப்புப் படையினர் குறைந்தது 28 பத்திரிகையாளர்களைக் கைது செய்துள்ளதாக ட்விட்டரில் செய்தியாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் வியாழனன்று அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை விதிக்க விரும்புவதாகக் கூறினார்.
நோர்வேயில், ஒஸ்லோவில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தூதரகத்திற்குள் நுழைய முயன்றனர், இதில் இருவர் லேசான காயங்களுக்கு உள்ளானதாக நோர்வே பொலிசார் தெரிவித்தனர். பொலிசார் 95 பேரை கைது செய்ததாக பொது ஒளிபரப்பு NRK தெரிவித்துள்ளது.
1979 ல் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கு விரோதமான மேற்கத்திய சக்திகளின் பின்னணியில் சமீபத்திய அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கூறினார்.
“ஈரான் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பலவீனமான நாடு என்று கற்பனை செய்து கொண்டு, எதிரிகள் 43 ஆண்டுகளாக இஸ்லாமிய ஈரானின் முகத்தில் கணக்கீட்டு பிழைகளை செய்துள்ளனர்,” என்று ரைசி அரசு தொலைக்காட்சியில் கூறினார்.