செவ்வாயன்று சிரியாவின் அலெப்போ விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஓடுபாதை சேதமடைந்து அது சேவையில் இருந்து நீக்கப்பட்டதாக சிரிய அரசு ஊடகம் ஒரு இராணுவ வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல், மத்தியதரைக் கடலில் இருந்து, கடலோர நகரமான லதாகியாவின் மேற்கே, இரவு 8:16 மணிக்கு ஏவப்பட்டது.
சிரிய வான் பாதுகாப்பு படையினர் இஸ்ரேலிய ஏவுகணைகளை இடைமறித்து, அவற்றில் பலவற்றை வீழ்த்தியதாக சிரிய அரசு செய்தி நிறுவனம் (SANA) செவ்வாயன்று முன்னதாக அறிவித்தது.
ஒரு வாரத்திற்குள் பதிவான இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
ஓகஸ்ட் 31 அன்று, விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ரொக்கெட்டுகளை வீசியது, இதன் விளைவாக பொருள் சேதம் ஏற்பட்டது என்று சிரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சிரியா மற்றும் லெபனானில் உள்ள நட்பு இயக்கங்களிற்கு ஆயுதங்களை வழங்கும் ஈரானின் நடவடிக்கையை சீர்குலைக்கவே, இஸ்ரேல் சிரிய விமான நிலையங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது என்று பிராந்திய இராஜதந்திர மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
தரைவழிப் பரிமாற்றங்களுக்கு இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிரியாவில் உள்ள தனது படைகள் மற்றும் நேச நாட்டுப் போராளிகளுக்கு இராணுவ உபகரணங்களைக் கொண்டு செல்வதற்கான மிகவும் நம்பகமான வழிமுறையாக ஈரான் விமானப் போக்குவரத்தை மேற்கொள்கிறது.
ஈரானில் இருந்து ஒரு விமானம் வருவதற்கு சற்று முன்னதாக கடந்த வார தாக்குதல் அலெப்போ விமான நிலையத்தை சேதப்படுத்தியது, இந்த சம்பவத்தை நன்கு அறிந்த ஈரான் ஆதரவு பிராந்திய கூட்டணியின் தளபதி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.