போதைப்பொருள் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறையடுத்து, தூக்கத்திலிருந்த நண்பனை கொல்வது எப்படியென யூரியூப்பை பார்த்து கொலை செய்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தின், காக்கநாடு இன்போபார்க் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கொலை நடந்தது.
அர்ஷத் (27) என்பவர் குற்றத்தை செய்ததாக திருக்காக்கரை எஸ்பி பிவி பேபி தெரிவித்தார்.
அந்த குடியிருப்பில் சஜீவ் கிருஷ்ணா என்ற இளைஞன் தங்கியிருந்தார். அவருடன் அம்ஜத் என்ற இளைஞரும் தங்கிருந்தார். அந்த தளத்தில் 20வது மாடியில் தங்கியிருந்த ஆதிஷ் இவர்களின் நண்பர். ஆதிஷினதும், அம்ஜத்தினதும் நண்பரான அர்ஷத், அடிக்கடி அந்த குடியிருப்பிற்கு வந்து சென்று, அனைவரும் நண்பர்களாகியுள்ளனர்.
கொலை நடந்த போது சஜீவ் மற்றும் அர்ஷத் ஆகியோர் மட்டுமே பிளாட்டில் இருந்தனர்.
சக நண்பர்கள் சுற்றுலா சென்ற நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை அவர்கள் சுஜீவ் உடன் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் சஜீவ் தொலைபேசியில் பதிலளிக்கவில்லை. மாறாக, செவ்வாய்க்கிழமை மதியம் வரை அவரது போனில் இருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன.
இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர். பொலிசார் அறைக்கு சென்ற போது, சுஜீவ் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக காணப்பட்டார்.
சந்தேகத்தின் அடிப்படையில் அர்ஷத்தை தேடிய போது அவர் தலைமறைவாகி விட்டார். பின்னர் புதன்கிழமை அவர் கைதானார்.
அர்ஷத் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து பெருமளவு போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன. அர்ஷத்துடனிருந்த அஷ்வந்தும் கைது செய்யப்பட்டார்.
அர்ஷத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின.
போதைப்பொருள் விற்பனை செய்ய சஜீவுக்கு பணம் கொடுத்ததாகவும், போதைப்பொருளை விற்ற பிறகு அந்தத் தொகையைத் திருப்பித் தருவதாக சஜீவ் உறுதியளித்த போதிலும், அவர் கொடுக்கவில்லையெனவும், இந்த பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாகவும் கூறினார்.
அந்த அறையில் தாம் இருவருமே இருந்தாகவும், தமக்குள் முரண்பாடு ஏற்பட்டு, பின்னர் தூக்கத்திற்கு சென்றதாக தெரிவித்தார்.
தனக்கு அருகில் சஜீவ் கிருஷ்ணா தூங்கிக் கொண்டிருந்ததாகவும், தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை எப்படி கொல்வது என யூடியூப்பைப் பார்த்ததாகவும் அர்ஷத் தெரிவித்துள்ளார்.
யூடியூப் வீடியோவைப் பார்த்து, கத்தியால் குத்தி கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிவித்தார்.
அதன்படி, சமையல் அறைக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து சஜீவை பலமுறை கத்தியால் குத்தினார். பின்னர், படுக்கை விரிப்பில் உடலைச் சுற்றி, குடியிருப்பில் உள்ள குப்பை கொட்டும் பகுதியில் வீசியுள்ளார்.