ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கிரிமியாவில் உள்ள ஒரு பெரிய ரஷ்ய இராணுவ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் குறைந்தது நான்கு வெடிப்புகள் நேற்று வியாழன்று ஏற்பட்டன. எனினும், இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று ரஷ்ய சார்பு உள்ளூர் நிர்வாக அதிகாரி கூறினார்.
செவஸ்டோபோலுக்கு வடக்கே உள்ள பெல்பெக் தளத்திற்கு அருகாமையில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக ஆதாரங்கள் தெரிவித்தன.
செவஸ்டோபோல் கவர்னர், பூர்வாங்கத் தகவலை மேற்கோள் காட்டி, ரஷ்ய விமான எதிர்ப்புப் படைகள் உக்ரேனிய ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாகக் கூறினார்.
“சேதம் இல்லை. யாரும் காயமடையவில்லை, ”என்று மைக்கேல் ரஸ்வோசாயேவ் டெலிகிராமில் எழுதினார்.
உக்ரேனிய செய்தி சேகரிக்கும் தளங்களில் வெளியிடப்பட்ட காட்சிகளில், இரவு வானத்தில் ரொக்கெட் ஏவப்பட்டதையும், குறைந்தது இரண்டு வெடிப்புகளின் சத்தத்தையும் காட்டியது.
உக்ரைனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் முக்கியமான விநியோக வழியாக கிரிமியா காணப்படுகிறது. உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கிரிமியாவை 2014 இராணுவ நடவடிக்கையில் ரஷ்யா கைப்பற்றியிருந்தது.
கிரிமியாவில் உள்ள வெடிமருந்துக் கிடங்கு மற்றும் இராணுவ, கடற்படை தளங்களை குறிவைத்து கடந்த சில நாட்களாக வெடிப்புக்கள் இடம்பெற்று வருகிறது. மேற்கு நாடுகள் வழங்கிய நவீன ஆயுதங்களின் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
கடந்த வாரம் கிரிமியா விமானத் தளத்தில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அவை விபத்து என ரஷ்யா குறியது இந்த விபத்தில் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 7 விமானங்கள் எரிந்தழிந்திருந்த செய்மதிப் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.