வடமாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்வதற்கு 3 பேர் கொண்ட குழுவை வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா நியமித்துள்ளார்.
வடமாகாண விவசாய திணைக்கள பணிப்பாளரான எஸ்.சிவகுமார் நிர்வாக நடைமுறைகளை மீறி நீண்டகாலம் செயற்பட்டிருந்தார்.
தசாப்தகாலத்திற்கு முன்னர் விவசாய பணிப்பாளராக க.சிவகுமார் நியமிக்கப்பட்ட போதும், அவரிலும் மூத்த அதிகாரிகள் கடந்தே அந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. அந்த நியமனம் அரசியல் செல்வாக்கு என அப்போது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், கடந்த விவசாய பணிப்பாளரின் காலத்தில் விவசாய சேவை அதிகாரிகளில் பலரிற்கும், அவரிற்குமிடையில் சுமுகமான உறவிருக்கவில்லை. ஓரிரவரை தவிர மிகுதியான அனைவரும் மாகாண விவசாய திணைக்களத்தை விட்டு வெளியேறி விட்டனர். இது வடக்கு விவசாய திணைக்கள கட்டமைப்பில் நீண்டகால ரீதியில் பெரும் தாக்கத்தை செலுத்திருந்தது.
வடக்கு விவசாய திணைக்கள விவகாரம் தொடர்பில் முன்னாள் ஆளுனர்கள் சரேன் ராகவன், பி.எஸ்.எம்.சாள்ஸ் போன்றவர்களிடம் பல தரப்பினர் சுட்டிக்காட்டிய போதும், அவர்கள் அது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்கவில்லை.
எனினும், வடக்கின் தற்போதைய ஆளுனர் ஜீவன் தியாகராஜா இந்த விவகாரத்தில் பல தரப்பு அழுத்தங்களையும் புறந்தள்ளி அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளர், அமைச்சின் செயலாளர்களின் இடமாற்றத்தை தடுத்து நிறுத்த கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தலையீடு செய்திருந்தார். எனினும், அரசியல் தலையீடுகளிற்கு இடமளிக்காமல் ஆளுனர் இந்த விடயத்தில் செயற்பட்டு, தனது முடிவை செயற்படுத்தி வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக, வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளர் பணிமனையில் நடந்த நிதி, நிர்வாக முறைகேடுகளை ஆராய 3 பேர் கொண்ட ஆரம்ப புலன் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் விஷ்ணு, வடமாகாண விவசாய அமைச்சின் நிர்வாக அதிகாரி சாந்தசீலன், வடமாகாண விதை உற்பத்தி கூட்டறவு நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் சதீஷ் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.
வடமாகாண விவசாய திணைக்களம் தொடர்பான சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த குழு ஆராயும்.
முன்னதாக, தமிழ்பக்கமும் வடக்கு விவசாய திணைக்கள ஊழல்கள் பலவற்றை சுட்டிக்காட்டியிருந்தது. எனினும், அப்போது அந்த விடயங்களில் எந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.