கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பல திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக கூறப்படும் சுமார் 600 பேர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக கங்கவத்தகோரலை பிரதேச சபையின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் அந்த ஹோட்டலில் மூன்று திருமணங்கள் நடைபெற்ற நிலையில் அந்த மூன்று திருமணங்களிலும் கலந்து கொண்ட சுமார் அறுநூறு பேர் வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சலால் அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நாளில், கண்டியின் பிரபல வர்த்தகர் ஒருவரின் குடும்பஸ்தர் ஒருவரின் திருமண நிகழ்வும் குறித்த ஹோட்டலில் இடம்பெற்றதுடன், தேனிலவுக்காக வெளிநாடு சென்றிருந்த திருமண ஜோடி, அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கங்காவத்தகோரலை உள்ளுராட்சி சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ஹோட்டலில் உணவு உண்டவர்களுக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும், ஹோட்டலின் நீரால் ஒவ்வாமை ஏற்படக்கூடும் என ஊகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஹோட்டலின் நீர் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்று சில நாட்களின் பின்னர் இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றமையால் விசாரணைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.