மியான்மரில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட தலைவி ஆங் சான் சூகி திங்கள்கிழமை (15) இராணுவ நீதிமன்றத்தால் மேலும் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்கனவே கிடைத்த 11 ஆண்டுகள் கூடுதலாக மேலும் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நோபல் பரிசு பெற்ற 77 வயதான ஆங் சான் சூகி, அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். அவரது தண்டனைக்கு எதிராக சூகி மேன்முறையீட செய்வார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்றது. ஊடகங்களுக்கோ பொதுமக்களுக்கோ உள்நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. சூகியின் சட்டத்தரணிகளிற்கும் தகவல்களை வெளியிட தடை விதிக்கப்பட்டது.
மியான்மரில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் (NLD) ஆட்சியை, பெப்ரவரி 1, 2021 அன்று இராணுவம் கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்றியது.
சூகி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சூகி காவலில் வைக்கப்பட்டு பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
இன்று 4 ஊழல் வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று, பொது நிலத்தை சந்தை விலைக்குக் குறைவான விலையில் வாடகைக்கு எடுப்பதற்கு சூகி தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
தகவல்களின்படி, அவர் தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடைகள் மூலம் ஒரு குடியிருப்பையும் கட்டினார்.
சூகி நான்கு வழக்குகளில் ஒவ்வொன்றிற்கும் மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்றார். ஆனால் அவற்றில் மூன்று குற்றச்சாட்டுக்களின் தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும். ஒரு வழக்கின் தண்டனை தனியாக அனுபவிக்க வேண்டும். மொத்தம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தேச துரோகம், ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.