இலங்கைக்குள் பெருமளவு போதைப்பொருளை கடத்தும் ‘ஹரக் கட்டா’ என்ற மிதிகம நந்துன் சிந்தக போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மலேசிய செல்ல முற்பட்ட போது டுபாய் விமான நிலையத்தில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
முதியன்சலாகே ரொஷான் இசங்க என்ற பெயரில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் மலேசியா செல்ல முற்பட்ட போது சிக்கியுள்ளார்.
ஹரக் கட்டாவிற்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக சர்வதேச பொலிசாருடன் இணைந்து இலங்கை பொலிசின் சிறப்பு பிரிவொன்று நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
ஹரக் கட்டா இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் போலிக்கடவுச்சீட்டு பற்றிய தகவலை பொலிசார் பெற்றிருந்தனர். உயிரிழந்த நபர் ஒருவரின் பெயரை (முதியன்சலாகே ரொஷான் இசங்க) பயன்படுத்தி பெறப்பட்ட போலி கடவுச்சீட்டின் புகைப்படத்தையும் பொலிசார் பெற்றிருந்தனர்.
ரொஷான் இசங்கவின் பெயரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டு பற்றிய விபரங்களை, டுபாய் பொலிஸாருக்கும், அந்நாட்டு குடிவரவுத் திணைக்களத்துக்கும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் ஹரக் கட்டா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரக் கட்டா, அவரது மனைவி மற்றும் நெருங்கிய சகாக்கள் சிலர் மலேசிய செல்ல முற்பட்ட போது சிக்கினர்.
அண்மைக்காலத்தில் இலங்கைக்குள் கடத்தப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள்களின் பின்னணியில் ஹரக் கட்டாவே இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.