இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கி வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடுவார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா புதன்கிழமை தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்திற்கு மனிதாபிமான காரணங்களுக்காக தற்காலிக விஜயத்தை மேற்கொள்கிறார் என உறுதி செய்த பிரதமர், தனக்கு நிரந்தர புகலிடம் அளிக்கும் மூன்றாவது நாட்டை தேடும் வரை தங்கியிருப்பார் என்றும், இந்த காலப்பகுதியில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
“இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இது ஒரு தற்காலிக தங்குமிடம் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். எந்த [அரசியல்] நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படவில்லை, மேலும் இது அவருக்கு தஞ்சம் புகுவதற்கு ஒரு நாட்டைக் கண்டறிய உதவும்” என்று ஜெனரல் பிரயுத் கூறினார்.
சிங்கப்பூரில் இருந்து அவர் வியாழன் அன்று தாயலாந்து செல்வார் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபய இன்னும் ராஜதந்திர பாஸ்போர்ட் வைத்திருப்பதால் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் டான் பிரமுத்வினாய் தெரிவித்தார்.
இந்த விஜயத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும் தாய்லாந்து அரசாங்கம் அவருக்கு தங்குமிட ஏற்பாடுகளை செய்யாது எனவும் டான் பிரமுத்வினாய் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்திற்கு வருவதற்கு கோட்டாபய செயற்பட்டுள்ளதால், கோட்டாபயவின் விஜயம் கொழும்புடன் முரண்பாடுகளை ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்தார்.
தாய்லாந்திற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதே அவர் தங்குவதற்கான நிபந்தனை என்று அமைச்சர் கூறினார்.