பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்ட மாகின. மேலும், பாலஸ்தீனத்தின் அகதிகளின் முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளானது.
பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழுவை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், இதில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீன பொதுமக்கள். பொதுமக்கள் உயிரிழப்புக்கு இஸ்ரேல் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.
இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 44 பேர் பலியாகினர். பலியானவர்களில் 15 பேர் குழந்தைகள். 350 பாலஸ்தீனிய பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு காசா பகுதியில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 11 நாட்கள் நடத்த போரைவிட கோரமான மோதலாக இது அமைந்திருக்கிறது.
இந்தச் சூழலில் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு எகிப்து மத்தியஸ்தம் செய்தது. இதன் விளைவாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழுவுக்கும் இடையே கடந்த மூன்று நாட்களாக நடந்த சண்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
போர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் பாலஸ்தீனம் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
மனிதாபிமான தேவைகளுக்காக காஸாவுக்குள் நுழையும் பாதைகளை பகுதியளவில் மீண்டும் திறப்பதாகவும் அமைதி காக்கப்பட்டால் முழுமையாக திறக்கப்படும் என்றும் இஸ்ரேல் திங்களன்று கூறியது.
கடந்த வாரம் இந்தப் பாதைகள்மூடப்பட்ட பிறகு, எரிபொருள் லொரிகள் காசாவிற்குள் முதன்முறையாக நுழைந்தன.எரிபொருள் பற்றாக்குறையால் காசாவில் உள்ள மின் உற்பத்தி நிலையம் சனிக்கிழமை நிறுத்தப்பட்டது. திங்கட்கிழமைக்குப் பிறகு ஆலை முழு செயல்பாட்டைத் தொடங்கும்.
இத்தாக்குதல் ஈரான் ஆதரவு பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவின் திறன்களை “பத்தாண்டுகளுக்கு” பின்னோக்கி எடுத்துச் சென்றதாக மூத்த இஸ்ரேலிய தூதரக அதிகாரி கூறினார். குறுகிய காலத்தில் இஸ்ரேல் தனது இலக்குகளை அடைந்ததால், தாக்குதல் “வெற்றிகரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை” என்றார்.
ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் ஜியாத் அல்-நகாலா, தமது தரப்பில் இரண்டு தலைவர்களை இழந்த போதிலும், ஜிஹாத் அமைப்பு வலுவாக உள்ளது என்றார். இது இஸ்லாமிய ஜிஹாத்துக்கு கிடைத்த வெற்றி என்றார்.
அவர் அப்படி கூறினாலும், இஸ்ரேலின் கடுமையான தாக்குதலின் போது ஜிஹாத் சந்தேகத்திற்கு இடமின்றி பலமான அடியைத் தாங்கியது. இரண்டு தலைவர்களை இழந்ததற்கு அப்பால், ஒரு இஸ்ரேலியரையும் தாக்காமல் நூற்றுக்கணக்கான ரொக்கெட்டுகளை ஏவி அதன் ஆயுதக் களஞ்சியத்தை அது குறைத்தது. இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புஅவற்றை அழித்தது.
போர்நிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மூத்த இஸ்லாமிய ஜிஹாத் கைதிகளின் விடுதலைக்காக எகிப்து செயற்படும் என்ற வாக்குறுதியைக் கொண்டிருந்தது, ஆனால் இது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.