இன்று (09) “தேசிய எதிர்ப்பு நாள்” ஆக பொதுமக்கள் போராட்டக்குழுக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அந்தந்த நகரங்களிலும் பிராந்தியங்களிலும் அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்படி பொதுமக்களை, போராட்ட அமைப்புக்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
பல முக்கிய பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் கூடி போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அரச அடக்குமுறை, அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும், அவசரகாலச் சட்டம், அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) ஆகியவற்றை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இந்த போராட்டம் இடம்பெறும்.
கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களையும் அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்களை வேட்டையாடுவதை நிறுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
போராட்ட இயக்கத்தில் முக்கியப் பிரமுகர்களை குறிவைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதை ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஏற்கனவே கண்டித்துள்ளன. பொதுஜன பெரமுனவினரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கைகளில் ரணில் அரசு ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
பௌத்த துறவி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல போராட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பயணத் தடை விதித்துள்ளன. போராட்டக்காரர்களின் வீடுகளை போலீசார் சோதனை செய்துள்ளனர். கைதான பலர் ‘கடத்தல்’ பாணியிலேயே கைது செய்யப்பட்டதாக குற்றம்சுமத்தப்படுகிறது. நாட்டில் சில காலமாக இல்லாமலிருந்த கடத்தல் கலாச்சாரத்தை அரசு உருவாக்குவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
இந்தவகை ‘கடத்தல்’ பாணி கைதுகளை நிறுத்தும்படி குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் நேற்று இரண்டு அடிப்படை உரிமை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.