அனைத்துக் கட்சி அரசாங்க வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தி இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன, கபீர் ஹாசிம், நளின் பண்டார ஜயமஹ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
90 நிமிட கலந்துரையாடல் சாதகமானது என பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா ருவிற்றரில் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச, தாம் நேர்மறை எண்ணத்துடன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும், பாராளுமன்றத்தின் ஊடாக அனைவரும் இணைந்து எவ்வாறு சிறந்த முறையில் செயற்பட முடியும் என்பதைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் உள்ள போராட்டக்காரர்களை விடுவிக்கவும், மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் இரு தரப்பினரும் சந்தித்து பேசவுள்ளனர்.