யாழ்ப்பாணத்திலிருந்து கஞ்சா வாங்க வந்த இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக வேதாரணியம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடலில் படகு பழுதடைந்துவிட்டதாக அவர்கள் நாடகமாடிய போதும், ‘முறையாக கவனித்து’ விசாரணை செய்ததில், உண்மையை கக்கி விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தின் பலாலி பகுதியை சேர்ந்த ரிஷிகேஷ் (21), இன்பருட்டியை சேர்ந்த ஜனார்த்தனன் (26) ஆகியோரே கடந்த 2ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த சிறுதலைக்காடு என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 2 இளைஞர்களை அந்த பகுதி மீனவர்கள் விசாரித்ததில், தாம் இலங்கை மீனவர்கள் என தெரிவித்துள்ளனர்.
கடந்த 1ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் பலாலியிலிருந்து வேறொருவரின் படகில் மீன்பிடிக்க வந்ததாகவும், பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்ததாகவும், டீசல் கானின் உதவியுடன் நீந்தி கரைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பிரதேச மீனவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், நாகப்பட்டினம் பொலிசார் அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு பொலிஸ் பிரிவில் கரையொதுங்கியது தெரிய வந்தது.
அங்கிருந்து நடந்து சிறுதலைக்காடு பகுதிக்கு வந்த போதே, அடையாளம் காணப்பட்டனர்.
இரண்டு இளைஞர்களின் வாக்குமூலத்திலும் முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். எனினும், அவர்கள் முரண்பாடாக தொடர்ந்து பேசினர். நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்தல் தீவிரமாக நடந்து வருவதால், இரண்டு இளைஞர்களிலும் பொலிசாருக்கு தீவிர சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, ‘முறையாக கவனித்து’ விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்போது, இருவரும் முழு உண்மைகளையும் கக்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து, வேதாரணியம் பொலிசாரை மேற்கோளிட்டு தமிழக ஊடகங்களில் வெளியான செய்தியில்,
இளைஞர்கள் இருவரும் 1ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டுள்ளனர். வேதாரணியம் மாவட்டம், கோடியாகரைக்கு அண்மையாக கடற்பரப்பில், குறிப்பிட்ட இடமொன்றில், இரவு 11 மணிக்கு நிற்க வேண்டுமென்றும், அங்கிருந்தபடி டோர்ச் லைட்டை விட்டுவிட்டு ஒளிரச் செய்ய வேண்டுமென்றும் அவர்களிற்கு கூறப்பட்டிருந்தது.
எனினும், இருவரும் அந்த கடலில் அந்த இடத்திற்கு வந்த போது, அதிகாலை 1.30 ஆகி விட்டது. அங்கு தரித்து நின்றபடி, டோர்ச் லைட்டை விட்டு விட்டு ஒளிரச் செய்துள்ளனர். எனினும், யாரும் வரவில்லை. குறிப்பிட்ட நேரம் கடந்து விட்டதால், கஞ்சா விநியோகிப்பவர்கள் அங்கிருந்து சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து சிறிது நேரம் கடலில் நின்ற இரண்டு இளைஞர்களும், மீண்டும் பலாலி திரும்பியுள்ளனர். இதன்போது, அவர்களின் படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய அவர்களால் முடியவில்லை.
படகுக கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது. கரையை அண்மித்ததும், இயந்திரத்தை கழற்றி கடலில் வீசிவிட்டு, படகை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு கரையேறியுள்ளனர்.
அவர்கள் படகை கைவிட்டதாக குறிப்பிட்ட இடத்தில் நேற்று வேதாரணியம் பொலிசார் தேடுதல் நடத்தியதில் படகு மீட்கப்பட்டது.
இதேவேளை, கைதான ஜனார்த்தனர் 2001 முதல் 2017ஆம் ஆண்டு வரை தமிழக அகதி முகாமில் வசித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2017ஆம் ஆண்டு போலி கடவுச்சீட்டில் கனடாவிற்கு செல்ல முற்பட்ட போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, 6 மாதங்கள் சிறையில் கழித்துள்ளார்.
பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்ட போது, வழக்கு தவணைகளிற்கு முன்னிலையாகாமல், இராமேஸ்வரம் ஊடாக சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கை சென்றுள்ளார்.
கைதான இரண்டு இளைஞர்களும் வேதாரணியம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.