நாவலப்பிட்டி கெட்டபுலா – அக்கரகந்த தோட்டத்தில் நேற்று முன் தினம் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூன்று பேரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
மகாவலி ஆற்றுக்கு நீரை ஏந்திச் செல்லும் கிளை ஆறான கெட்டபுலா அக்கரகந்த ஆற்றில், மழை அதிகரிக்கும் போது அங்கிருக்கும் பாலத்துக்கு மேலாக நீர் செல்வது வழமையான விடயம். இதன்போது கயிற்றின் உதவியுடனேயே மக்கள் பாலத்தை கடந்து செல்வார்கள்.
நேற்று முன்தினமும் அவ்வாறே நீர் அதிகரித்துள்ளது.
தோட்டத் தொழிலுக்குச் சென்றிருந்த 3 பிள்ளைகளின் தாயான 45 வயதான ஜெயலெட்சுமி கயிற்றின் உதவியுடன் பாலத்தை கடக்க முற்பட்ட போது கை நழுவி ஆற்றில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து அத்தோட்டத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 52 வயதான சத்தியசீலன் மற்றும் 3 பிள்ளைகளின் தந்தையான 36 வயதான சந்திரமோகன் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயற்சித்த போது, அவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நாவலப்பிட்டி பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று பகல் 12 மணியிலிருந்து கொத்மலை இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.