27.6 C
Jaffna
August 19, 2022
உலகம் முக்கியச் செய்திகள்

சொல்லியடிக்கும் ‘நிஞ்ஜா’: அல்-கொய்தா தலைவர் ஜவாஹிரி எப்படி கொல்லப்பட்டார்?

21 வருடங்களாக அமெரிக்க உளவுத்துறைக்கு ‘தண்ணி’ காட்டிக் கொண்டிருந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி சி.ஐ.ஏயின் உயர்துல்லிய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்- ஜவாஹிரியின் கொலையின் மூலம், 2001 செப்ரெம்பர் 11 தாக்குதலின் அனைத்து சூத்திரதாரிகளையும் அமெரிக்கா கொன்றுவிட்டது, அல்லது கைது செய்து விட்டது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் தலிபான் அரசாங்க அதிகாரிகள், பணக்காரர்கள் வசிக்கும் ஷெர்பூர் பகுதியில் உள்ள 3 மாடிகளை கொண்ட குடியிருப்பு மீது, ஜூலை 31 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்கா படைகள் ஆப்கானில் நிலை கொண்டிருந்த தருணத்தில் இந்த வீட்டில்  மேற்கு இராஜதந்திரிகள் தங்கியிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 6.18 மணிக்கு வீட்டின் பல்கனிக்கு அல்-ஜவாஹிரி வந்த போது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீட்டின் ஏனைய பகுதிகளில் குடும்பத்தின் பல உறுப்பினர்கள் இருந்த போதும், அவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை, அவர்கள் குறிவைக்கப்படவில்லையென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த  அய்மான் அல்-ஜவாஹிரி?

அல்-ஜவாஹிரி 1951 இல் எகிப்தில் பிறந்தார். அவர் எகிப்தின் கெய்ரோவில் ஒரு உயர் வர்க்க சுற்றுப்புறத்தில் வளர்ந்தார். ஒரு முக்கிய மருத்துவரின் மகனும், பிரபல அறிஞர்களின் பேரனும் ஆவார். அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார்.

இளைஞனாக இருந்த போது, இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தக்களால் ஈர்க்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் குழுவில் சேர்ந்தார், இரண்டு எகிப்திய தலைவர் அன்வர் சதாத்தை படுகொலை செய்ய உதவியதற்காக இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் முதல்முறை கைதான பொது 15 வயது.

அவர் இறுதியில் அந்த குழுவின் தலைவராக ஆனார். இது எகிப்தில் ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது.

1980 களில் அவர் ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுடன் சண்டையிடும் முஜாஹிதீனில் சேர்ந்தார்.

அங்கு அவர் பின்லேடனுடன் நட்பாக இணைந்தார், அவருடைய தனிப்பட்ட மருத்துவரானார்.

அவர் தனது குழுவான எகிப்திய இஸ்லாமிய ஜிஹாதை அல் கொய்தாவுடன் 1998 இல் முறையாக இணைத்தார்.

இரண்டு பேரும் பின்னர் ஒரு ஃபத்வா அல்லது ஆணையை வெளியிட்டனர்: ‘அமெரிக்கர்களையும் அவர்களது கூட்டாளிகளையும், குடிமக்களாக இருந்தாலும் சரி, ராணுவத்தினராக இருந்தாலும் சரி, கொல்வது மற்றும் போராடுவது என்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.’என அதில் குறிப்பிட்டிருந்தனர்.

1997 இல் எகிப்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்கதலின் சூத்திரதாரி அல்- ஜவாஹிரியே.

1998 ஆம் ஆண்டில், தான்சானியா மற்றும் கென்யாவின் நைரோபியில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது குண்டுவீத் தாக்குதல் நடத்தினார். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 12 அமெரிக்கர்கள் உட்பட 224 பேர் இறந்தனர். மேலும் 4,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2001 செப்ரெம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக விளங்கினார்.

அவரும் பின்லேடனும் 2001 இன் பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளிடம் இருந்து தப்பினர்.

2011 இல் பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டார். அதன் பின் அல்-ஜவாஹிரி அல் கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

ஜவாஹிரியை மோப்பம் பிடித்த சி.ஐ.ஏ

அல்-ஜவாஹிரி உயிருடன் இருக்கிறாரா என்பதே அண்மைய மாதங்கள் வரை மர்மமாக இருந்தது.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அல்-ஜவாஹிரி நோயால் இறந்துவிட்டார் என்று வதந்திகள் பரவின. எனினும், சில மாதங்களின் பின் 2020 செப்ரெம்பர் 11 தாக்குதல் நிறைவை குறிக்கும் வீடியோவில் தோன்றினார்.

என்றாலும், பலர் அந்த வீடியோவில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது முன்னரே பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாம் மாணவிகளின் ஹிஜாப் தடைக்கு எதிராக, மாணவியொருவர் ஹிஜாப் அணிந்து வந்ததை பாராட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். இதன்பின்னரே, அல்-ஜவாஹிரி உயிருடன் உள்ளார் என்பதை பலரும் நம்பினார்கள்.

அதை தொடர்ந்து ஜெருசலேம் யூத மயமாக்க அனுமதிக்கப்படாது என்றும், சிரியாவில் ரஷ்ய துருப்புக்களை குறிவைத்த நடத்தப்பட்ட தாக்குதலை பாராட்டியும் வீடியோக்கள் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோக்களின் மூலம், ஜவாஹிரி உயிருடன் இருக்கிறார் என பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். என்றாலும், கடந்த ஆண்டே, ஜவாஹிரியின் இருப்பிடத்தை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ மோப்பம் பிடித்து விட்டது.

ஜவாஹிரி தினமும் காலையில் சில நிமிடங்கள் வீட்டு பல்கனியில் உலாவுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த  நேரத்தில் தாக்க முடிவெடுக்கப்பட்டது.

ட்ரோனில் இருந்து இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன. பல்கனில் உஉள்ள ஜவாஹிரியை குறிவைத்து முதலாவது ஏவுகணை வீசப்பட்டது. ஒருவேளை அவர் எச்சரிக்கையடைந்து கீழேயுள்ள தளத்திற்கு சென்றால், அங்கும் தாக்க, இரண்டாவது ஏவுகணை வீசப்பட்டது.

கடந்த ஆண்டு அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானுக்குச் சென்றதை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் அறிந்த பிறகு, தொடர் கண்காணிப்பிற்கு பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கான் உள்துறை அமைச்சர் சிராஜூதீன் ஹக்கானியின் பாதுகாப்பில், அவரது உதவியாளர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் ஜவாஹிரி தங்கியிருந்தார்.

இந்த தாக்குதலிற்காக 6 மாதங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

“இந்த ஆண்டு அல்-ஜவாஹிரி குடும்பம் அவரது மனைவி, அவரது மகள் மற்றும் அவரது குழந்தைகள் காபூலில் உள்ள பாதுகாப்பான வீட்டிற்கு இடம்பெயர்ந்ததை நாங்கள் அடையாளம் கண்டோம்” என்று நேற்று அமெரிக்க ஜனாதிபதியின் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

அல்-ஜவாஹிரி அந்த பாதுகாப்பான வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

தாக்குதலில் அல்-ஜவாஹிரி மட்டுமே கொல்லப்பட்டதாகவும், தலிபான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பயங்கரவாதக் குழுவான ஹக்கானி வலையமைப்பைச் சேர்ந்தவர்களே அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், தாக்குதலை தொடர்ந்து, விடயத்தை மூடி மறைக்க அவரது குடும்பத்தை பாதுகாப்பான இல்லத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

“தாக்குதல் நடத்தப்பட்ட போது அல்-ஜவாஹிரியின் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பான இல்லத்தின் மற்ற பகுதிகளில் இருந்தனர். அவர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை. காயமடையவில்லை” என்று அதிகாரி கூறினார்.

ஜூலை 1 ஆம் திகதி அல்-ஜவாஹிரியின் இருப்பிடம் பற்றி பிடனுக்கு முதலில் தெரிவிக்கப்பட்டது.

பிடன் அவர்களின் உளவுத்துறையிடம் ‘விரிவான கேள்விகளை’ கேட்டதாகவும், உளவுத்துறை அதிகாரிகள் காண்பித்த வீட்டின் மாதிரியை ஆய்வு செய்ததாகவும், பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கேட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

ஜூலை 25 அன்று, தாக்குதலை அங்கீகரிக்கும் முடிவை பிடன் எடுத்தார்.

‘ஆபத்தை குறைக்கும் வகையில் செயல்படுவதை உறுதிசெய்ய ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதில் அவர் குறிப்பாக கவனம் செலுத்தினார். எங்களின் மதிப்பீடுகளில் நாம் நம்பிக்கை வைத்திருக்கும் அடிப்படையை அவர் புரிந்து கொள்ள விரும்பினார். கட்டிடத் திட்டங்கள் மற்றும் தாக்குதலின் சாத்தியமான விளைவுகள் பற்றிய கூடுதல் தகவல்களை ஜனாதிபதி கோரினார்,’ என்று அந்த அதிகாரி கூறினார்.

தாக்குதல்நடத்தப்பட்டபோது பிடென் கோவிட் நோயுடன் தனிமையில் இருந்தார். தாக்குதல் எப்போது தொடங்கியது மற்றும் எப்போது முடிந்தது என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

சொல்லியடிக்கும் ‘நிஞ்ஜா’

அல்-ஜவாஹிரி மூன்று மாடி வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்தபோது, அமெரிக்க ட்ரோனில் இருந்து இரண்டு R9X ஹெல்ஃபயர் (நின்ஜா) ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. அந்த இரண்டு ஏவுகணைகளும், தற்போது அமெரிக்காவினால் மிகவும் தேடப்படும் நபரின் உயிரைப் பறித்தன.

பொதுமக்களுடன் கலந்துள்ள இலக்குகளை தாக்கும் போது, சேதத்தைக் குறைத்து, இலக்கை மட்டும் கொல்லும் நோக்கில் அமெரிக்கா உருவாக்கியுள்ள அதிநவீன ஏவுகணையே R9X ஹெல்ஃபயர் (நிஞ்ஜா) ஆகும்.

இந்த ஏவுகணையில் கத்திகள் பொருத்தப்பட்டுள்ளதால், நிஞ்ஜா என்ற பெயரை பெற்றது.

வெடிப்பு, அதிக வெப்பம், கத்திகளை கொண்ட மிகப் பயங்கரமாக ஏவுகணை இது.

அமெரிக்காவிடமுள்ள உயர்துல்லியமான, எதிரிகளிற்கு அதிக பீதியை ஏற்படுத்தும் ஏவுகணை இது.

தரையிலுள்ள உயர்துல்லிய புலனாய்வு தகவல்கள், நின்ஜாவின் தாக்குதல் வெற்றியை உறுதி செய்கின்றன.

தனிநபர்களையே நேரடியாக -துல்லியமான இலக்கு வைக்க கூடியது இந்த ஏவுகணை. அந்த நபரின் நடமாட்டம் பற்றிய உயர் துல்லிய புலனாய்வு தகவல்கள் இருந்தால் மாத்திரமே நிஞ்ஜா தாக்குதல் வெற்றியளிக்கும். அமெரிக்க புலனாய்வு அமைப்பு இரண்டையும் கச்சிதமாக செய்துள்ளது.

இன்றைய திகதியில், R9X ஹெல்ஃபயர் ஏவுகணை, அமெரிக்க இராணுவத்தின் துல்லியமான படுகொலைகளுக்கான விருப்பமான ஆயுதங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதில் அமெரிக்க இலக்குகள் அழிக்கப்பட்டாலும், ஏராளமாக பொதுமக்களும் கொல்லப்பட்டனர். உதாரணமாக, 2011 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அல் ஜவாஹிரியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், அந்த வீட்டிலிருந்தவர்கள் அனேகமாக கொல்லப்பட்டிருப்பார்கள்.

2011 அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்த செய்திகள், உலகளாவிய எதிர்ப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அமெரிக்கா ‘நிஞ்ஜா’ ஏவுகணைகளை உருவாக்கியது.

இது சிஐஏ மற்றும் பாதுகாப்புத் துறையின் கூட்டு முயற்சியால் இது உருவாக்கப்பட்டது.

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்று

இந்த ஏவுகணையானது லொக்ஹீட் மார்ட்டின் மற்றும் நார்த்ரோப் கும்மன் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. பென்டகன் வசம் எத்தனை R9X ஏவுகணைகள் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை R9X பயன்படுத்தப்பட்டதை இரகசிய இராணுவ கூட்டு சிறப்பு நடவடிக்கைக் கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது என்று நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுதவிர,  குறிப்பிட்ட இலக்குகளை அழிக்க மேலும் ஒரு டசின் ஏவுகணைகள்  பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

1950 களில் கொரிய மற்றும் வியட்நாம் போர்களின் போது, ​​அமெரிக்க இராணுவம் லேசி டோக்ஸ் என்று பெயரிடப்பட்ட வெடிக்காத இயக்க வெடிகுண்டுகளை பயன்படுத்தியிருந்தது. அந்த குண்டுகளை அடிப்படையாக கொண்டு, நிஞ்ஜா உருவாக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்து வீசப்பட்ட பிறகு இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி கொல்லும் வகையில் லேசி டோக்ஸ் குண்டுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. 560 மற்றும் 625 பவுண்ஸ் எடை கொண்ட இந்த குண்டுகள் அவ்வளவு வெற்றிகரமாக அமையவில்லை. அத்துடன், 1960 களில் அவற்றின் பாவனை நிறுத்தப்பட்டது.

R9X ஏவுகணைகளை அமெரிக்க தயாரித்திருப்பதை முதன்முதலில் 2019 இல் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிவித்தது. இந்த ஏவுகணை ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக், ஏமன் மற்றும் சோமாலியாவில் உள்ள நபர்கள் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக செய்தித்தாள் கூறியது.

R9X ஏகணையை ‘பறக்கும் நிஞ்ஜா’ என்று என்று ஜர்னல் கூறியது.

இந்த ஏவுகணையை பற்றி அப்போது ஜர்னல் வழங்கிய உதாரணம் இது –

R9X மிகவும் துல்லியமாக இருந்தது. காரின் முன் இருக்கையில் இருவர் உட்கார்ந்து பயணித்துக் கொண்டிருந்த போது,  சாரதிக்கு அருகிலிருப்பவர் மட்டுமே இலக்கெனில், சாரதிக்கு எந்த ஆபத்துமின்றி, அருகிலிருப்பவவை கொல்லும்.

இந்த எவுகணை இயங்கத் தொடங்கியதும், முன் பகுதி விரிந்து, அதிலிருந்து 6 பிளேட்கள் (கத்தி போன்றது) மின்விசிறி போல அதிவேகமாக சுழற்றியடையும். இது கட்டிடங்கள் மற்றும் கார் கூரைகளை வெட்ட முடியும். இலக்கை நேரடியாக தாக்கும் போது, குறிப்பிட்ட நபர் வெட்டுக்காயங்களிற்கும் இலக்காகி உயிரிழப்பார்.

ஓகஸ்ட் 2021 இல், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் இரண்டு ISIS தீவிரவாதிகளைக் கொல்ல MQ-9 ரீப்பர் ட்ரோனில் R9X பயன்படுத்தப்பட்டது.

அந்த தாக்குதலைத் தொடர்ந்து, பொதுமக்கள் உயிரிழப்புகள் இல்லாதது குறித்து அமெரிக்க இராணுவ உயரதிகாரிகள் தற்பெருமை காட்டினர்.

ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத் தாக்குதலில் 13 அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பெப்ரவரி 2017 இல் அல் கொய்தாவின் இரண்டாவது தலைவர் அஹ்மத் ஹசன் அபு கைர் அல்-மஸ்ரியைக் கொன்றதற்கு R9X பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

அல்கொய்தா அமைப்பாளரும், அல்-சபாப் தலைவருமான அல்-கொய்தாவின் உயர்மட்ட தலைவரான அபு யஹ்யா அல்-லிபி, பாகிஸ்தானில் கொல்லப்பட்ட அன்வர் அல்-அவ்லாகி, 2014 இல் சோமாலியாவில் மொக்தார் அலி ஜுபேர், 2015 இல் சிரியாவில் முகமது எம்வாசி அல்லது ஜிஹாதி ஜானைக் ஆகியோர் இந்த ஏவுகணையால் துல்லியமாக கொல்லப்பட்டனர்.

2019 ஜனவரியில் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைவர் மொஹபுல்லாவை கொல்லவும் இது மீண்டும் பயன்படுத்தப்பட்டது. அதே மாதத்தில் ஏமனில் உள்ள யுஎஸ்எஸ் கோல் குண்டுவெடிப்பு சந்தேகநபர் ஜமெல் அகமது முகமது அலி அல்-பதாவி மற்றும் ஜூன் 2019 இல் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைவர் அபு அகமது அல்-ஜசிரி மீது இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டது.

சிரியாவில் ஹுராஸ் அல்-தின் தலைவர்கள் கஸ்ஸாம் அல்-உர்துனி மற்றும் பிலால் அல்-சனானி ஆகியோரின் மரணத்திற்கு இந்த ஏவுகணை காரணமாக இருந்தது.

ஜூன் 2022 இல் சிரியாவின் இட்லிப் நகரில் ஹுராஸ் அல் தின் தலைவரான அபு ஹம்சா அல்-யெமனியும் ர் நிஞ்ஜாவினால் கொல்லப்பட்டார்.

அவர் மீதான தாக்குதல் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. வீதியில் மோட்டார் சைக்கிள் சின்னாபின்னமாகி கிடக்கும் காட்சிகள் வெளியாகியிருந்தன.

ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொன்ற வான்வழித் தாக்குதலில் நிஞ்ஜா பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

தலிபான்கள் ஒப்பந்தத்தை மீறினரா?

அல்-ஜவாஹிரி காபூலில் தலிபான் அரசின் உயர்மட்ட பிரமுகரின் பராமரிப்பில் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தலிபான் உள்துறை மந்திரி சிராஜுதீன் ஹக்கானியே, ஜவாஹிரிக்கு அடைக்கலம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஹக்கானி அமைப்பு தொடர்ந்து தீவிரவாத அமைப்பாக செயற்பட்டு வருகிறது. அந்த சமூகத்தையும் அமைதிப்படுத்த, தலிபான்கள், ஆட்சியில் சிராஜூதீனை இணைத்துக் கொண்டனர்.

ஆப்கானில் இருந்து அமெரிக்கா வெளியேற முன்னர், டோஹாவில் தலிபான்களுடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தியிருந்தனர்.

டோஹா ஒப்பந்தத்தின் முக்கிய சாரம், ஆப்கானில் மீண்டும் அல்-கொய்தாவிற்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்பதே.

தலிபான்கள் இந்த ஒப்பந்தத்தை மீறினரா அல்லது தலிபான்களே ஜவாஹிரிக்கு வலைவீசி அழைத்து வந்து, ‘நாங்கள் ஒளித்து வைத்திருப்பதை போல ஒளித்து வைத்திருக்கிறோம். நீங்கள் புகுந்து அடிப்பதை போல அடியுங்கள்’ என அமெரிக்காவுடன் ஏதாவது டீல் செய்தார்களா என்பது தெரியவில்லை.

அது உளவுத்துறை விவகாரங்கள் என்பதால் இலகுவாக வெளியில் வராது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ரஷ்ய ஜனாதிபதி- கோட்டா தொலைபேசியில் உரையாடல்

Pagetamil

பிரான்ஸ் ஜனாதிபதியின் கன்னத்தில் அறைந்த நபர்: பரபரப்பு வீடியோ!

Pagetamil

புதிய கொரோனா வகை ‘டெல்டா பிளஸ்’ கண்டுபிடிப்பு!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!