இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து, இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளர் டானிஷ் அலியை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று (01) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த 26ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக விமானத்தில் காத்திருந்த போது பொலிஸாரால் பலவந்தமாக கைது செய்யப்பட்டார். கடந்த 27ஆம் திகதி கோட்டை நீதவான் முன்னிலையில் அவர் முற்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, சந்தேக நபரை இன்று (01) அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு நீதவான் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை உலகம் முழுவதும் அறியும் வேளையில் அடையாள அணிவகுப்பு அவசியமில்லை என பிரதம நீதவான் குறிப்பிட்டார்.
இதன்படி, அடையாள அணிவகுப்பை ரத்து செய்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஊழல் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டக்காரர்களில் ஒருவரான டானிஷ் அலி (31), குருநாகல் வெபட பிரதேசத்தைச் சேர்ந்தவர்.