தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

இந்திய தூதரகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு; கூட்டமைப்பு டலசை ஆதரித்த காரணம்: ரணிலுக்கு தகவலை கொடுத்த தமிழ் அரசு கட்சி எம்.பி!

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் இந்தியாவின் தலையீடு இருக்கவில்லையென கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்திய தூதரகம் இப்படியொரு மறுப்பை ஏன் வெளியிட வேண்டி ஏற்பட்டது என்ற கேள்வி வாசகர்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். அதனால், ஜனாதிபதி தெரிவிற்கு முதல்நாள் -19ஆம் திகதி நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை தமிழ்பக்கம் வெளியிடுகிறது.

ஜனாதிபதி தெரிவில் யாரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம், 19ஆம் திகதி மாலை இரா.சம்பந்தனின் வீட்டில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகிய மூன்று பேர் மாத்திரமே, டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், வினோநோகராதலிங்கம், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோர் யாரையும் ஆதரிக்காமல் இருக்கலாம் என தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களுடன் பேசினோம், அவர்களும் டலசை ஆதரிக்க சொல்கிறார்கள் என சுமந்திரன் தெரிவித்தார்.

மாலை 5.30 மணிக்கு தொடங்கிய கலந்துரையாடல் கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்களாக இழுபட்டபடி சென்றது.

இரவு 7.30 இற்கு அண்மித்த சமயத்தில் எம்.ஏ.சுமந்திரன் இன்னொரு தகவலை தெரிவித்தார். இந்தியா, அமெரிக்க தூதரகங்களும் சஜித் தரப்பையே ஆதரிக்கின்றன என தெரிவித்தார்.

அத்துடன், சித்தார்த்தனை பார்த்து, ‘இந்தியா உங்களிற்கு இது பற்றி சொல்லவில்லையா?’ என கேட்டார்.

தனக்கு இந்திய தூதரகத்திலிருந்து அப்படியொரு தகவல் தரப்படவில்லையென சித்தார்த்தன் தெரிவித்தார்.

இதையடுத்து, செல்வம் அடைக்கலநாதனை பார்த்து, ‘உங்களிற்கும் சொல்லப்படவில்லையா?’ என கேட்டார்.

இந்திய தூதரகத்தின் அதிகாரியொருவர் தொடர்பு கொண்டு சஜித்திற்கு ஆதரவளிக்குமாறு தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

‘அவர் சஜித்திற்கு வாக்களிக்குமாறே குறிப்பிட்டார். இப்பொழுது சஜித் போட்டியிடவேயில்லையே’ என்றார் செல்வம்.

இந்திய தூதரகம், சஜித் தரப்பையே ஆதரிக்க சொன்னதே தவிர, சஜித்தை ஆதரிக்கச் சொல்லவில்லையென சுமந்திரன் தெரிவித்தார்.

தமக்கு அப்படி சொல்லவில்லை என செல்வம் மறுத்தார்.

இப்படியே பேச்சு நீண்டு கொண்டிருந்த சமயத்தில், சட்டென சுமந்திரன் தொலைபேசியில் அழைப்பேற்படுத்தினார். இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கே அழைப்பேற்படுத்தினார்.

தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்த பிரதி உயர்ஸ்தானிகரிடம், ‘நீங்கள் சஜித்தை ஆதரிக்க சொன்னீர்களா அல்லது சஜித் தரப்பை ஆதரிக்க சொன்னீர்களா?’ என சுமந்திரன் கேட்டார்.

அவர் பதிலளித்த பின்னர், அங்கு எழுந்த சர்ச்சையை குறிப்பிட்ட சுமந்திரன், ‘தொலைபேசியை அவுட் ஸ்பீக்கரில் விடுகிறேன்’ என குறிப்பிட்டதுடன், தொலைபேசியை செல்வம் அடைக்கலநாதனிடம் கொடுத்தார்.

சஜித் தரப்பையே ஆதரிக்க சொன்னதாக, பிரதி உயர்ஸ்தானிகர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்தார். (அன்று காலையே செல்வம் அடைக்கலநாதனிற்கு தொலைபேசி ஊடாக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது)

அதுவரை, வாக்கெடுப்பை புறக்கணிக்கும் நிலைப்பாட்டில் இருந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டமைக்கு முதலாவது காரணம் இதுதான்.

இரண்டாவது காரணம்- சம்பந்தரின் ‘தொல்லை’. 7 பேரும் தம்மால் இயன்ற வரை எவ்வளவு விளக்கங்கள் கொடுத்த போதும், ‘இல்லைத் தம்பி… டலசை ஆதரிப்போம்’ என ஒற்றை வரியை, மந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்தார்.

இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் ஆகினாலும், டலசை ஆதரிக்கும் தீர்மானம் எடுக்கப்படாமல், சம்பந்தர் அசைய மாட்டார் என்பதை தெரிந்ததால், 7 எம்.பிக்களும் தமது நிலைப்பாட்டை மாற்றுவதாக குறிப்பிட்டனர்.

யார் அந்த கருப்பாடு?

19ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், டலஸை ஆதரிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்ட போதும், 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டலஸிற்கு வாக்களிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தல் திகதி நிர்ணயிக்கப்பட்ட பின்னர், 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், பல்வேறு நாட்களில் குறைந்தது 4 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் ரணிலையே ஆதரிப்போம், கட்சி என்ன தீர்மானம் எடுத்தாலும் இரகசிய வாக்கெடுப்பினால் எம்மை யாரும் கட்டுப்படுத்த முடியாது என தமிழ் பக்கத்திடம் தெரிவித்திருந்தனர்.

இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர், தனது வாக்கை செல்லபடியற்றதாக்குவேன் என 19ஆம் திகதி இரவு தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

எனினும், 20ஆம் திகதி வாக்கெடுப்பில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலை ஆதரித்தும், ஒருவர் வாக்கை செல்லுபடியற்றதாக்கியதாகவும் தமிழ்பக்கம் மதிப்பிடுகிறது.

19ஆம் திகதி இரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் முடிந்த பின்னர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர், ரணில் விக்கிரமசிங்கவை இரகசியமாக சந்தித்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிடம் சந்தேகம் உள்ளது.

தமிழ் தேசி கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்த கருத்துக்களை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் அந்த உறுப்பினரே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்ததாக கூட்டமைப்பின் தலைமை சந்தேகிக்கிறது.

இந்த தகவல் கிடைத்ததும், அன்று இரவே, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில், தனக்கு எதிராக இந்தியா ஏன் செயற்படுகிறது என ரணில் வினவியதுடன், கூட்டமைப்பு தொடர்புடைய விடயத்தையும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயக ரீதியில் இடம்பெறும் ஆட்சி மாற்றங்களில் இந்தியா தலையிடாது, இலங்கையில் நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்பது மட்டும்தான் இந்தியாவின் விருப்பம். எந்த தரப்பையும் இந்தியா ஆதரிக்கவில்லையென எஸ்.ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

இதன் பின்னர், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடனும், ஜெய்சங்கர் பேசியதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த பின்னணியிலேயே, இலங்கை தேர்தலில் இந்தியா தலையிடவில்லையென அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, இந்த சம்பவம் பற்றிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்காவில் ஆரம்பப்பாடசாலையில் இளம்பெண் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பலி!

Pagetamil

வெடுக்குநாறி ஆலயத்தை மீள அமைக்க ரணில் பணிப்பு: மாவையை நேரில் சந்தித்து பேசவும் விருப்பம்!

Pagetamil

‘கச்சதீவு தேவாலயத்தில் மிகுந்த பக்தியுடன் கடற்படையினர் சடங்குகள் செய்து வருகிறார்கள்’: புத்தர் சிலைக்கு கடற்படை புது விளக்கம்!

Pagetamil

சிறை தண்டனையின் எதிரொலி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

Pagetamil

இன்னும் சுயாட்சி கிடைக்காத பகுதியாக தமிழர் பகுதியை பிரகடனப்படுத்துங்கள்: ஐ.நாவில் கஜேந்திரகுமார் எம்.பி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!