ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர் திட்டமிடப்பட்டபடி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் செல்லவில்லை.
தனது பயணத்திற்கு தனியார் விமானத்தை ஏற்பாடு செய்து தருமாறு, மாலைதீவு அரசிடம் கோட்டாபய கோரிக்கை விடுத்துள்ளார்.
கோட்டாபயவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் அவர்களது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் SQ437 விமானத்தில் மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இரவு சிங்கப்பூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் பாதுகாப்புக் காரணங்களால் விமானத்தில் ஏறவில்லை என்றும் மாலைதீவு வட்டாரங்கள் தெரிவித்தன.
மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக மலேசியா அரசு தனி விமானம் ஏற்பாடு செய்யலாமென தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, மாலைதீவு அரசாங்கம் கோட்டாபயவிற்கு தஞ்சமளித்தமைக்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நாடான இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் மாலைதீவு தன்னைத் தானே புகுத்திவிட்டதாகவும், எனவே அரசாங்கம் இலங்கையர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் Maldives Development Allience வலியுறுத்தியுள்ளது.
“வேறொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் மாலைதீவு தன்னைத்தானே ஈடுபடுத்திக்கொண்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த முடிவின் விளைவுகள் பல தலைமுறையினரால் உணரப்படும்.
இலங்கையின் அன்புக்குரிய குடிமக்களிடம் மாலத்தீவு அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு அரசு மற்றும் பிற அதிகாரிகளுக்கு கூறுகிறோம்.
பல ஆண்டுகளாக மாலைதீவுகள் நடுநிலையான இராஜதந்திர கொள்கைகளில் உறுதியாக இருக்கிறது. இதிலிருந்து விலகி, நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் அரசாங்கம் ஒரு கருத்தைக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இது எப்படி நடந்தது என்பதை விசாரிக்கவும், மாலைதீவு குடிமக்களுக்கு இதற்கு வழிவகுத்த சம்பவங்களை தெளிவுபடுத்தவும் அழைப்பு விடுக்கிறோம்’ என அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாலைதீவுகளின் சபாநாயகர் நஷீத்தே, கோட்டாவிற்கு அடைக்கலம் கொடுப்பதில் முன்னின்று செயற்பட்டுள்ளார்.
மலேசியாவின் ஆளும் MDP கட்சிக்கும், ராஜபக்ஷக்களிற்குமிடையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக வலுவான உறவுகள் உள்ளன. MDP இன் மூத்த உறுப்பினர்கள், கொழும்பில் வீடுகள் மற்றும் வணிகங்களை வைத்துள்ளனர்.
ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியின் மாமனார் சிக்கா அஹமட் இஸ்மாயில் மாணிக்கும் இலங்கையில் வசிப்பதோடு, இலங்கையில் பல்வேறு தொழில்களை சொந்தமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.