உக்ரைன் இராணுவத்தில் தன்னார்வலராக சேர்ந்த பிரேசில் மொடல் அழகி, ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. இதனிடையே, பிரேசில் மொடல் அழகி தலிட்டா டு வல்லே (39) ஸ்நைப்பர் வீராங்கனையாகவும், பிரேசில் முன்னாள் இராணுவ வீரர் டக்லஸ் புரிகோ ஆகியோர் உக்ரைன் இராணுவத்தில் தன்னார்வலராக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சேர்ந்தனர். இவர்கள் கார்கிவ் பகுதியில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு பதுங்கு குழியை குறிவைத்து ரஷ்ய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பதுங்கு குழி தீப்பற்றி எரிந்ததில், உள்ளேயிந்த தலிட்டா மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
தலிட்டாவை காப்பாற்ற அங்கு ஓடிச் சென்ற டக்லஸ் புரிகோவும் கொல்லப்பட்டார்.
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தலிட்டா, தனது பயணம் மற்றும் பயிற்சி குறித்த வீடியோவை யூடியூபில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் மொடலான தலிட்டா, ஏற்கெனவே ஈராக்கின் குர்திஸ்தான் பகுதி இராணுவத்தில் சேர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பணியாற்றி உள்ளார். அங்கு அவர் ஸ்நைப்பர் பயிற்சி பெற்றுள்ளார். மேலும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் விலங்குகள் மீட்புக் குழுவிலும் பணியாற்றி உள்ளார்.



