தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்கும் நிதி உதவி தொடர்பில் அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளது.
இலங்கைக்கான உதவிப் பொதிக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக நாணய நிதிய குழு ஜூன் 30 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை நாணய நிதியமீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
Peter Breuer மற்றும் Masahiro Nozaki தலைமையிலான சர்வதேச நாணய நிதிய குழு இலங்கை அதிகாரிகளுடன் மே மாதம் 9 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கடன் வழங்கும் ஏற்பாட்டின் மூலம் ஆதரிக்கப்படும் ஒரு பொருளாதார வேலைத்திட்டத்தில் மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தியது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தலைமையிலான பொருளாதார குழுவுடனான தொழில்நுட்ப கலந்துரையாடலைத் தொடர்ந்து, இறுதிக் கூட்டத்தில் நாணய நிதிய குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது.
தனியார் துறை, நிதித்துறை மற்றும் மேம்பாட்டு பங்காளிகளின் பிரதிநிதிகளையும் குழு சந்தித்தது.
பணியின் முடிவில், நாணய நிதிய குழு, இலங்கை கடினமான பொருளாதார நிலைமைகள் மற்றும் கடுமையான கொடுப்பனவு சமநிலை சிக்கல்களை எதிர்கொள்கிறது.
மேலும், “எரிபொருள் மற்றும் மின் பற்றாக்குறையால் பொருளாதார நடவடிக்கைகள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய பொருளாதார குறிகாட்டிகள் தெரிவிக்கின்றன. அதிகரித்துவரும் உலகளாவிய உணவு மற்றும் எண்ணெய் விலைகள், கொடுப்பனவுகளின் சமநிலை அழுத்தங்களை மேலும் சேர்த்துள்ளன. பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் நாணய தேய்மானம் உள்ளிட்ட பல காரணிகளால் பணவீக்கம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மீதான தற்போதைய நெருக்கடியின் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக நாணய நிதிய குழு குறிப்பிட்டது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, தற்போது நடந்து வரும் பிரச்சினைகளை சமாளிக்க சுமார் 5 பில்லியன் டொலர்களை பெற முயற்சிக்கிறது.
இதேவேளை, விரைவில் உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்திருக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது வெளியில் இருந்து உதவி பெறுவதில் தாமதம் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டார்.
நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நன்கொடையாளர்கள் மற்றும் நட்பு நாடுகளின் ஆதரவை இலங்கை நாடுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாகவும் பிரதமர் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இலங்கை 15 மணித்தியால மின்வெட்டு மற்றும் பெரும் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கையின் பிரதமராக ஆறாவது தடவையாக நியமிக்கப்பட்டார்.
நாட்டை முன்னோக்கி வழிநடத்த நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராகவும் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் விக்ரமசிங்க தனது நியமனத்தைத் தொடர்ந்து, தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண வரி சீர்திருத்தங்கள் உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
மூலதனச் செலவினங்களை மீள் ஒதுக்கீடு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் சமர்ப்பிக்க உள்ளார்.
உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல பலதரப்பு முகவர் அமைப்புகளும் நெருக்கடியை சமாளிக்க சமீபத்திய வாரங்களில் இலங்கைக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.