நெதர்லாந்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து உலக சாதனை ஓட்டங்களை குவித்துள்ளது. ஒருநாள் போட்டியொன்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணியென்ற தமது சொந்த சாதனையை மீண்டும் புதுப்பித்துள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 498 ஓட்டங்களை இங்கிலாந்து குவித்தது.
நாணயச்சுழற்சியில் வென்ற நெதர்லாந்து கப்டன் பீட்டர் சீலர் இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
தொடக்க வீரர் ஜேசன் ரோய் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்த 3 வீரர்களும் வரிசையாக சதம் அடித்தனர். டேவிட் மலான், பில் சால்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் சதம் அடித்தனர்.
இதில் ஜோஸ் பட்லர் “மிருகத்தனமான“ சதம் அடித்தார். அவர் 70 பந்துகளில் 162 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 14 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசினார்
டேவிட் மலான் 109 பந்துகளில் 125 ஓட்டங்களையும், பில் சால்ட் 93 பந்துகளில் 122 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின் வரிசையில் லியாம் லிவிங்ஸ்டோன் 22 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 498 ஓட்டங்களை குவித்தது.
2018ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 481 ரன்கள் இங்கிலாந்து குவித்ததே, இதுவரை ஒருநாள் போட்டியில் குவிக்கப்பட்ட அதிக ஓட்ட சாதனையாக இருந்தது. அது இன்று இங்கிலாந்தினாலேயே முறியடிக்கப்பட்டது.
பட்லர் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தின் இரண்டாவது அதிவேக சதத்தை 47 பந்துகளில் அடித்தார். இங்கிலாந்தின் முதல் மூன்று வேகமான சதங்களிற்கும் அவரே சொந்தக்காரர். 2015 இல் 46 பந்துகளிலும், 2019 இல் 50 பந்துகளிலும் பாகிஸ்தானிற்கு எதிராக சதம் அடித்திருந்தார்.
கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான பிறகு தனது நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடிய சால்ட், இங்கிலாந்துக்காக தனது முதல் சதத்தை ஒரு சிறந்த ஆட்டத்தில் அடித்தார், வெறும் 93 பந்துகளில் 122 ரன்களை எட்டினார்.
இங்கிலாந்து 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. அதன் பின்னரே அசுரத்தனமாக ஆடியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 26 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை படைத்தது.
லிவிங்ஸ்டன் வெறும் 13 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். எனினும், அடுத்த 2 பந்துகளில் ஓட்டம் பெறாததால் அதிவேக அரைச்சத சாதனையை இழந்தார். டி வில்லியர்ஸின் 16 பந்து அரைச்சதமே உலகசாதனையாக இருக்கிறது. லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் அரைச்சதமடித்தார். ஒருநாள் போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து சாதனையை அவர் பெற்றார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டம் குவித்த முதல் 4 அணிகள்
498/4 – ஜனவரி 2022 நெதர்லாந்திற்கு எதிராக இங்கிலாந்து
481/6 – ஜனவரி 2018 அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து
444/3 – ஓகஸ்ட் 2018 பாகிஸ்தானிற்கு எதிராக இங்கிலாந்து
443/9 – ஜூலை 2006 நெதர்லாந்திற்கு எதிராக இலங்கை