தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் திகதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் திகதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுனர் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல், இந்த வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசுத் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து அவசியம். உயர் நீதிமன்றமே கூட பரிசீலிக்கலாம் என்று வாதிடப்பட்டிருந்தது. நளினி தரப்பில், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அறிவிக்கலாம். ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதால், மீண்டும் அளுநருக்கு அனுப்பக்கூடாது என்று வாதிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்ததைப் போல, உயர் நீதிமன்றம் விடுவிக்க முடியாது எனக்கூறி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.