இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவஸ்திரேலியா அணி டக்வெத்-லூயிஸ் முறைப்படி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களையும், தனுஸ்க குணதிலக 55 ஓட்டங்களையும், பத்தும் நிஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இறுதியாக களமிறங்கிய வனிந்து ஹசரங்க அதிரடியாக துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் 37 ஓட்டங்களை குவித்தார்.
பந்து வீச்சில் மார்னஸ் லாபுசாக்னே மற்றும் அஸ்டின் அகர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 73 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இதனையடுத்து மீண்டும் போட்டி ஆரம்பித்தபோது, டக்வெத்-லூயிஸ் முறைப்படி 44 ஓவர்களுக்ளில் 282 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா அணி 42.3 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.
கிளன் மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்கயும், ஸ்ரிபன் ஸ்மித் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும், தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய துனித் வெல்லாலகே இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் கிளன் மக்ஸ்வெல்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.