நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானத்திற்கு எதிரான வழக்கை திறந்த நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு அழைக்குமாறு சட்டமா அதிபர் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் இன்று (6) நகர்த்தல் பத்திரம் செய்துள்ளார்.
விசேட சமர்ப்பணத்தை முன்வைப்பதற்காக இந்த வழக்கை திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.
விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள், தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் நீதிமன்ற தீர்ப்பின் பிரச்சினைக்குரிய சட்டப் பின்னணி ஆகியவற்றை மையப்படுத்தியே சட்டமா அதிபர் நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நாளை மறுநாள் (8) விசாரணைக்கு வருகிறது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவுக்குத் திரும்பும் விமானத்தை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடுத்து, ரஷ்ய தேசிய விமானச் சேவையின் Aeroflot விமானம் ஜூன் 2 ஆம் திகதி நண்பகல் முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து காலை 10.10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் ரஷ்ய ஏர்ஃப்ளோட் விமானம் SU288 மதியம் 12.50 மணிக்கு ரஷ்யாவின் மொஸ்கோவிற்கு திரும்பவும் புறப்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் நிறுவனம், இலங்கைக்கான வணிக விமானங்களை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், கொழும்புக்கான விமானங்களுக்கான டிக்கெட் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தவும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.