முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பொன்னகர் கிராம அலுவலரை இடமாற்றும் செயற்பாட்டிற்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட 15 கிராமசேவகர் பிரிவுகளும் எதிர்ப்பினை வெளியிட்டு பொன்னகர் கிராம அலுவலரின் இடமாற்றத்திற்கு தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளன.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு இன்று பிரதேச கிராம மட்ட அமைப்புகள் இணைந்து அனுப்பி வைத்த மகஜரிலேயே கிராம அலுவலரின் இடமாற்றத்தை தடுத்து நிறுத்த கோரி குறித்த மகஜரை அனுப்பி வைத்துள்ளன.
குறித்த மகஜரில்,
“குறித்த கிராம அலுவலர் கடமையாற்றிய காலப்பகுதியில் தனிப்பட்ட ஒருவரின் காணிப்பிரச்சனை காரணமாக தனிப்பட்ட தனிப்பட்ட விரோதங்களினால் இவருக்கெதிரான முறைப்பாடுகளுக்கு அமைய இடமாற்றுவதாக அறிகின்றோம்.
எமது பிரதேசத்தில் இடம்பெறும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக உள்ளூர் அமைப்புகள் பிரதேச செயலாளருக்கு அனுப்பிய மகஜர்களை கண்டுகொள்ளாத பிரதேச செயலாளர்,எமது பிரதேசத்திற்கு வெளியில் உள்ள தனி நபர்கள் அனுப்பும் முறைப்பாடுகளுக்கு அவசரமாக பக்கச்சார்புடன் விசாரணை நடாத்தி இவ்வாறான நேர்மையான எமது கிராம சேவையாளரை எமது பிரதேசத்தினை விட்டு அகற்றும் நடவடிக்கையினை ஒரு பழிவாங்கும் செயற்பாடாக கருதுவதுடன் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது பிரதேசத்தில் இடம்பெற்ற எம்மால் அனுப்பிவைக்கப்பட்ட அனைத்து ஊழல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கும் உரிய விசாரணைகளை நடாத்துமாறு கேட்டுக்கொள்வதுடன் , இவரது கட்டாய இடமார்ரத்தினை உடனடியாக நிறுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்” என்றும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.