நாளை நடைபெறவுள்ள ஐ.பி.எல் இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதிசுற்றை எட்டி விட்டது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2வது தகுதி சுற்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற டு பிளேசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் கப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி அணி பெங்களூரு சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 7 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்தார்.
அவரை தொடர்ந்து கடந்த போட்டியில் சதம் அடித்த படிதார் – கப்டன் டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டு பிளசிஸ் 27 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .
ஒருமுனையில் படிதார் அற்புதமாக விளையாட வர மறுமுனையில் மேக்ஸ்வெல் ட்ரென்ட் போல்ட் பந்தில் ஓபே மெக்காயிடம் கட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சிறப்பாக ஆடிய படிதார் அரைசதம் கடந்து அசத்தினார். 42 பந்துகளில் 58 ரன்கள் அடித்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.’
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது.
158 ரன்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதல் ஓவரில் பவுண்டரி மழைகளை பொழிந்த இந்த ஜோடி பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால் 5 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்தது.
ஜெய்ஸ்வால் 21 ரன்களில் ஆட்டமிழக்க சஞ்சு சாம்சன் களமிறங்கினார். பட்லர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது.
பின்னர் சாம்சன் 23 ரன்களில் ஹசரங்க பந்துவீச்சில் வெளியேறினார்.
தொடர்ந்து படிக்கல் களமிறங்கினார். ஒருமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய பட்லர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். தொடர்ந்து பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த பட்லர் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் அடிக்கும் 4வது சதம் இதுவாகும்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 161 ரன்கள் அடித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
பட்லர்
60 பந்துகளில் 106 ரன்கள் அடித்த பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சதம் அடித்தவர்களுக்கான சாதனை பட்டியலில் கோலியுடன் பட்லர் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்குமுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் கோலி 4 சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.