ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்யும் முயற்சி காகாசஸ் என்ற பகுதியில் நடந்ததாக உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் கிரிலோ புடாநவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி போர் தொடுத்தது. இருதரப்பினர் இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில ரஷ்ய ஜனாதிபதி புடின் உடல்நிலை குறித்து வதந்திகளும் வெளியாகின்றன. அவர் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டது. அதன்பின் புடினுக்கு அடிவயிற்றில் தேங்கிய நீரை அகற்ற, அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்பட்டது.
அவரை படுகொலை செய்ய, இரண்டு மாதங்களிற்கு முன்னர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது வெற்றி பெறவில்லை எனவும் உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் கிரிலோ புடாநவ் தற்போது கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலுக்கு இடையே காகாசஸ் என்ற பகுதியில் அங்கிருக்கும் நபர்களால் நடத்தப்பட்டது, முற்றிலும் தோல்வியடைந்த முயற்சி அது, அது பற்றி அப்போது தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இவரது முழு பேட்டி உக்ரைன்ஸ்கா ப்ராவ்டா என்ற ஒன்லைன் செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி புடின் படுகொலை முயற்சி சம்பவம் உண்மையா என இன்னும் சரிபார்க்கப்படவில்லை. ஆனால் புடினை பற்றி பல செய்திகள் மேற்கு ஊடகங்களால் தினமும் வெளியிப்பட்டு வருகின்றது. அவை பெரும்பாலும் வதந்திகளாகி விடுகின்றன. தற்போது, படுகொலை முயற்சி தகவலும் வெளியாகியுள்ளது.
ரஷ்யான் – உக்ரைன் போர் ஓகஸ்ட் மாதம் மத்தியில் திருப்பு முனையை எட்டும் எனவும், இந்தாண்டு இறுதியில்தான் இப்போர் முடிவுக்கு வரும், இது ரஷ்யாவின் தலைமை மாற்றத்துக்கு வழி வகுக்கும், ஜனாதிபதி புடினை பதவியில் இருந்து அகற்ற, ரஷ்யாவில் இராணுவ புரட்சி ஏற்படும் எனவும் அதை தடுத்த நிறுத்த முடியாது எனவும் புடாநவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் ஓகஸ்டில் முழுமையாக வந்து சேர்ந்து, உக்ரைன் படையினர் பயிற்சியின் பின் ஓகஸ்டில் முழுமையாக பயன்படுத்த தொடங்குவதுடன் போர்க்களத்தில் மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த 2017ஆம் ஆண்டு அளித்த பேட்டியில் தான் 5 படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியுள்ளதாகவும், தனது பாதுகாப்பை பற்றி கவலைப்பட்டதில்லை எனவும் கூறியிருந்தார்.