ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க, டான் பிரியசாத் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மேலும் ஆறு சந்தேகநபர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு வெளியேயும் காலி முகத்திடலிலும் பதிவாகியிருந்த வன்முறை மற்றும் அமைதியின்மையை தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இடமாற்றம் செய்யாமை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை முன்னிலைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்து, முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய பணிப்புரையை அடுத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.