புத்தளம் மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்தவும் அவரது மெய்ப்பாதுகாவலரும் பயணித்த வர்த்தக அமைச்சுக்கு சொந்தமான V8 ரக ஜீப் வண்டி கடந்த 9 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் அழிக்கப்பட்டது.
வாகனம் பொலிஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
அசோக பிரியந்த, அலரிமாளிகையில் வைபவம் முடிந்து புத்தளம் திரும்பிக் கொண்டிருந்தார். ஆர். சேனாநாயக்க மாவத்தையில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வர்த்தக அமைச்சின் சாரதி வாகனத்தை திருப்பி பொலிஸ் நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
உரிமையாளர் இல்லாத WP CT 1728 V8 குறித்த தகவல்களைத் தேடிய போது அது வர்த்தக அமைச்சுக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் பின்னர், மாரவில பகுதியைச் சேர்ந்த சாரதி கெலும் சமந்த லீலாரத்ன பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சேதமடைந்த வாகனம் மற்றும் 14 வாகனங்களின் சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கறுவாத்தோட்டம் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், 14 வாகனங்களையும் பரிசோதித்ததன் பின்னர், அந்த 14 வாகனங்களின் அறிக்கைகளை கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் சமர்ப்பிக்குமாறும் நீதவான் அரச பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹதகம ஓட்டிச் சென்ற Wagon R காரும் சேதமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகரான வீரசிங்க பத்திரனகே சமீர மதுசித் கறுவாத்தோட்டப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த வாகனம் மஹிந்த கஹதகமவிற்கு முறைப்பாட்டாளரினால் பாவனைக்காக வழங்கப்பட்டதாக வர்த்தகர் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.