பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு இன்று அறிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதை அவரது ஊடகப்பிரிவும் உறுதி செய்தது..
இன்று காலை அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.
பெரமுன ஆதரவாளர்கள், அலரிமாளிகைக்கு வெளியே ‘மைனா கோ கமா’ என்ற இடத்தில் அமைதியான முறையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் கொழும்பில் காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கமா’ போராட்டத் தளத்திற்குள் நுழைந்து, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அந்த இடத்தில் இருந்த பல எதிர்ப்புப் பொருட்களையும் அழித்துள்ளனர்.
அப்பாவி எதிர்ப்பாளர்கள் மீது அரச ஆதரவுடன் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஜனாதிபதியும் பிரதமரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், காலி முகத்திடலிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாரியளவிலான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பிரதமர் மற்றும் அவரது சகோதரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுமாறு பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், மஹிந்த ராஜபக்ஷ அந்த அழைப்புகளுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டார்.
எவ்வாறாயினும், கொழும்பில் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இன்று நடத்திய அமைதியின்மை மற்றும் தாக்குதல்களை அடுத்து, பிரதமர் பதவி விலக தீர்மானித்துள்ளார்.