வேலைக்கு செல்பவரை திருமணம் செய்துகொள் என்று மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்ததுஃ
சிந்த்வாராவைச் சேர்ந்த சதீஷ் (35) என்பவருக்கும் சமோட்டா தில்வாரி என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது. இருவரும் ஹர்தாவில் வசித்து வந்தனர். பிடெக் பட்டதாரியான சதீஷ், சில காலம் வேலையில்லாமல் இருந்துள்ளார். அவரது மனைவி வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி சமோட்டா வேலைக்காக ரஹத்கான் சென்ற போது, சதீஷ் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்து கொள்ளும் முன்பு மனைவிக்கு ‘நான் போகிறேன். நீ நல்லா இரு, வேலை செய்கிற வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்’ என்று வாட்ஸப்பில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். மறுநாள் காலையில் குறுந்தகவலைப் பார்த்த அவரது மனைவி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சதீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இரண்டு பக்க தற்கொலைக் கடிதத்தையும் அவர் விட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.