லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க பதவி விலகியுள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜயசிங்க தெரிவித்தார்.
ஜயசிங்க ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்குள் ஊழலை இல்லாதொழிக்க தனது கடமைகள் மற்றும் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதியின் ஆதரவைப் பெற்ற போதிலும், நிதித்துறையில் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளின் ஆதரவைப் பெறவில்லை என்று தெஷார ஜயசிங்க மேலும் கூறினார்.
அரசாங்கத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் நெருக்கடியைத் தீர்க்க உதவத் தவறியதாகவும் அதற்குப் பதிலாக தவறான அறிக்கைகளை வெளியிட்டதாகவும் ஜயசிங்க கூறினார்.
இந்த அற்ப அரசியல் கலாசாரம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினுள் மட்டுமின்றி ஏனைய அரச நிறுவனங்களிலும் காணப்படுவதாக தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சூழலில் தனது கடமைகளை தொடர முடியாது என தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் தனது பதவி விலகலை சமர்ப்பித்துள்ளார்.
எரிவாயு விநியோகம் தொடர்பான கவலைகளை உள்நாட்டில் மட்டும் தீர்க்க முடியாது எனத் தெரிவித்த தெஷார ஜயசிங்க, நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முழு பொருளாதாரத் துறையும் பங்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி பற்றாக்குறை, அரச மற்றும் தனியார் வங்கித் துறைகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் இலங்கை மீதான கணிப்புகள் அனைத்தும் எரிவாயு துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.