யாழ் நகரில் தர்ம அடி வாங்கிய அருண் சித்தார்த் என்ற நபரையும், மற்றொரு சிங்கள பரையும் பொலிசார் கைது செய்து, எச்சரிக்கை செய்து, பிணையில் விடுவித்துள்ளனர்.
யாழ் நகரில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் இடம்பெற்றது.
எரிவாயு, எரிபொருள், உணவுப்பொருட்களின் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளிற்கு அரசின் தவறான முகாமைத்துவமே காரணம் என குறிப்பிட்டு, அரசை பதவிவிலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
நேற்று யாழ் நகரில் நடந்த பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தியபடி அமைதியாக பேரணி இடம்பெற்ற போது, அருண் சித்தார்த் என்ற நபரும், மேலும் இரண்டு சிங்களம் பேசும் நபர்களும் அதற்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தினார்.
ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி போது, அதற்கு எதிராக அந்த நபர்கள் சத்தமிட்டார். அத்துடன், அமைதியான மக்கள் போராட்டத்தை வீடியோ பதிவும் செய்தனர்.
இதனால் இரு தரப்பிற்குள்ளும் இழுபறி நீடித்தது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், குழப்பத்தை ஏற்படுத்திய மூவரையும் சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் பொலிசாரால் மீட்கப்பட்டனர்.
தாக்குதலிற்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதியானார்.
பின்னர், அருண் சித்தார்த்தும், மற்றொரு சிங்கள இளைஞரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு சென்று, முறைப்பாடு செய்ய முயன்றனர்.
எனினும், அவர்களின் முறைப்பாட்டை ஏற்க முடியாதென தெரிவித்த பொலிசார், அந்த குழுவினரே குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை சுட்டிக்காட்டி, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
அமைதியான முறையில் நடந்த போராட்டத்திற்கு இடையூறு விளைவித்து குழப்பிய குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டது.
பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.