தமிழ் சங்கதி

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேச ‘பெர்மிசன்’ கேட்ட கூட்டமைப்பு எம்.பி: கிடைக்காததால் கடைசி வரை ‘கப்சிப்’!

இப்போது அரசியலில் இருப்பவர்களிற்கு இரண்டு மூலதனங்கள்தான் அத்தியாவசிய தேவை. ஒன்று பணம், மற்றது வாய். வாயுள்ளவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பது பொதுவான யதார்த்தம்..

அரசியல்வாதிகளிற்கு தேவையான இந்த அடிப்படை மூலதனமில்லாமல், கூட்டமைப்பிற்குள் ‘வாயில்லாமல்’ திண்டாடி வருகிறார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.

அவர் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்.

நீண்டகாலமாக அரசியலில் இருந்தாலும், அவரே எதிர்பாராத விதமாக, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்து விட்டது. இந்த உறுப்புரிமையை அவருக்கு கட்சி தீர்மானித்து வழங்கவில்லை. எம்.ஏ.சுமந்திரனே வழங்கினார். அந்த தேசியப்பட்டியல் நியமன விவகாரத்தால் அப்போதைய செயலாளரும் பதவி துறக்க வேண்டியேற்பட்டது.

இதனால், நாடாளுமன்ற பதவிக்காலம் வரை வாயை திறந்து சிக்கலில் மாட்டாமல், சுமந்திரனை கோபப்படுத்தாமல், காலத்தை கடத்தி விடுவோம் என்ற பாணியில் செயற்பட்டு வருகிறார்.

இதனால் கட்சியின் உள்ளக கலந்துரையாடல்களிலும் அவர் வாய் திறந்து கதைப்பதில்லை. கட்சியின் மத்தியகுழு, அரசியல்குழு என்பவற்றிலும் அங்கம் வகிக்கிறார். எனினும், அந்தக் கூட்டங்களில் அவர் பேசுவதில்லை. எப்பொழுதாவது அரிதாகவே பேசியிருப்பார்.

ஏற்கனவே, அம்பாறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் யாரும் வெற்றியடையவில்லை. தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களும் வெற்றியடையில்லை. இதன் பின்னர் மாவை சேனாதிராசாவை ‘காய் வெட்டுவதற்காக’ த.கலையரசன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார்.

எனினும், வாய் திறந்து கதைத்தால் சுமந்திரன் பதவியை பறித்து விடுவார் என்பதை போல பயந்து, பவ்வியம் காட்டும் த.கலையரசனின் அணுகுமுறையால், அவருக்கு இலாபம் ஏதாவது கிடைக்கலாம். ஆனால் அம்பாறைக்கு பின்னடைவே ஏற்படும். எஞ்சியுள்ள தமிழ் தேசிய வாக்காளர்களையும் வெறுப்படைய செய்துவிடும்.

அவர் பேச வேண்டிய இடங்களில் பேசாமல், ‘ஓவர் பவ்வியம்’ காண்பிப்பதால், அம்பாறைக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு நேற்றும் ஒரு உதாரணம் நிகழ்ந்தது.

நேற்று(25) தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதிக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி அபகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் பற்றியெல்லாம் பேசப்பட்டது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது பிரதேச பிரச்சனைகள் பற்றி பேசினார்கள்.

சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியுடன் பேசினார்கள். பிரச்சனைகளை சொன்னார்கள். ஆனால், ஒரேயொருவர் மட்டும் வாய் திறக்கவில்லை.

அவர்- சாட்சாத் த.கலையரசன்தான்.

இத்தனைக்கும் தமிழ் மக்களின் உணர்திறனான விடயமாக மாறியுள்ள கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாத விடயம் பேசப்படாமல் உள்ளது. கல்முனையை பற்றி கூட்டமைப்பு நேற்று மூச்சும் விடவில்லை. தனது சொந்த மாவட்டத்தில் உள்ள கல்முனை விவகாரத்தை பற்றி த.கலையரனும் மூச்சுக்காட்டவில்லை.

ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பிற்கும் பேச்சு நடந்து கொண்டிருந்த போது, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரிசையில் இறுதியாக உட்கார்ந்திருந்தார் த.கலையரசன். பேச்சின் இடையே திடீரென எழுந்த கலையரசன், வரிசையில் இரண்டாவதாக உட்கார்ந்திருந்த எம்.ஏ.சுமந்திரனின் அருகே சென்று, காதுக்குள் ஏதோ குசுகுசுத்தார். சுமந்திரன் மறுக்கும் பாணியில் தலையை அசைத்து ஏதோ பதிலளித்தார்.

த.கலையரசன் திரும்பவும் தனது ஆசனத்தில் போய் உட்கார்ந்து விட்டார். கொட்டாவி விடக்கூட வாய் திறக்கவில்லை.

கூட்டத்தின் பின்னர், தனக்கு நெருக்கமானவர்களிடம் கலையரசன் கவலைப்பட்டு ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளார். பேச்சின் இடையில் எம்.ஏ.சுமந்திரனிற்கு அருகில் சென்று, கல்முனை விடயத்தை பேசுவதற்கு அனுமதி கேட்டதாகவும், கல்முனை பற்றிய ஆவணமொன்றை கொண்டு வந்துள்ளதாகவும் கூறியதாகவும், ஆனால் இப்பொழுது அதைப்பற்றி பேச வேண்டியதில்லையென சுமந்திரன் மறுத்து விட்டதாகவும் கலையரசன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, மொழிபெயர்ப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பேசினார்கள். அப்படியொரு வாய்ப்பிருந்தும், தனது சொந்த மாவட்டத்திலுள்ள பிரச்சனையை பேச முடியாமல், அனுமதி கேட்டு, கிடைக்காமல் விட்டதும் மௌனமாக இருந்து விட்டு, வீட்டுக்கு வந்து கவலைப்பட்டுத்தான் என்ன? கவலைப்படாமல் விட்டுத்தான் என்ன?

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘கரைத்துறைப்பற்று தராசு கூட்டாளிகள் சுயேச்சைக்குழுவென்றுதான் நானும் நினைத்தேன்’: எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil

முல்லைத்தீவு முஸ்லிம் கூட்டணி தவறுதான்… கட்சியின் தலைவர் நானா- மாவைக்கு வந்த குழப்பம்: இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் நடந்தது என்ன?

Pagetamil

சிறிதரனின் வலையில் மாட்டிய மணி அணி: தமிழ் அரசு கட்சிக்காக யாழ் மாநகர முதல்வர் போட்டியிலிருந்து ஒதுங்குகிறார்கள்!

Pagetamil

யாழ் மாநகரசபையில் ஈ.பி.டி.பியின் ஆதரவை கோரிய தமிழ் அரசு கட்சி: டக்ளஸின் நிபந்தனையில் ஆடிப்போன மாவை, சுமந்திரன்!

Pagetamil

யாழ் மாநகரசபையில் ரெலோ காலி: அத்தனை உறுப்பினர்களும் பல்டி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!