ரஷ்ய கோடீஸ்வரருக்குச் சொந்தமான அதி சொகுசு படகு ஒன்றை இத்தாலிய பொலிசார் கைப்பற்றியுள்ளதாக இத்தாலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ரே மெல்னிச்சென்கோ என்ற ரஷ்ய கோடீஸ்வரருக்கு சொந்தமான சொகுசு படகு இதுது.
ஆண்ட்ரே மெல்னிச்சென்கோவும் ஐரோப்பிய பொருளாதாரத் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
530 மில்லியன் யூரோக்கள் ($578 மில்லியன்) மதிப்புள்ள 143 மீட்டர் நீளமான பாய்மரப் படகு, வடக்கு துறைமுகமான ட்ரைஸ்டேவில் தனிமைப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது பிலிப் ஸ்டார்க் வடிவமைத்து, ஜெர்மனியில் நோபிஸ்க்ரக் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கப்பல் உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகுஎன்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முக்கிய உர உற்பத்தியாளர் யூரோகெம் குழுமம் மற்றும் நிலக்கரி நிறுவனமான SUEK என்பவற்றின் உரிமையாளர் ஆண்ட்ரே மெல்னிச்சென்கோ.
கடந்த வாரம் இத்தாலிய பொலிசார் 143 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான வில்லாக்கள் மற்றும் படகுகளை ஐந்து ரஷ்யர்களிடமிருந்து கைப்பற்றினர். இந்த கோடீஸ்வரரர்களும் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொடர்புடைய பணக்கார ரஷ்யர்களை தண்டிப்பதாக குறிப்பிடும் மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இதுவாகும்.