பேரறிவாளனுக்கு உடனடியாக திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதத்தின் முதல் வாரத்தில் பேரறிவாளன் தவறாமல் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
‘உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
எனது மகனின் உடல்நிலை சீராக உள்ளதற்கு முக்கிய காரணம் 9 மாத காலமாக பரோலை நீட்டித்ததுதான் காரணம். தற்போது சுதந்திரமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்வதாக பேரறிவாளன் கூறியுள்ளார்.
இதனால், முதல் ஏற்பாடாக பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் எனது மகன் விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டவர்.
இப்போதைக்கு அதற்கான பொருளாதார வசதி இல்லை. வருங்காலத்தில் கண்டிப்பாக விவசாயத்தில் பேரறிவாளன் ஈடுபடுவார். 30 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு என் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு மற்றும் முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.