நிகழ்ச்சிக்கு வருவதாக கூறி 37 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எழுந்த வதந்திகளுக்கு தனது சமூக வலைதளம் வாயிலாக விளக்கம் கொடுத்துள்ளார் சோனாக்ஷி.
பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி, சூப்பர் ஸ்டாரின் லிங்கா படத்தில் நடித்திருந்தார். பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக இருக்கும் சோனாக்ஷி, கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி டெல்லியில் நடந்த இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான உத்திரபிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த பிரமோத் சர்மா என்பவரிடம் இருந்து 37லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் கடைசி நிமிடத்தில் சோனாக்ஷி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. கொடுத்த காசை திருப்பி கேட்டதற்கு தரமுடியாது என சோனாக்ஷி கூறிவிட்டதாக பிரமோத் சர்மா கூறியுள்ளார்.
இதனால் பிரமோத் மொரதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் சோனாக்ஷி மீது மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 2019ஆம் ஆண்டு அவரிடம் விசாரணை நடத்த போலீசார் அவரது வீட்டிற்கு சென்ற போது, அவர் அங்கு இல்லை. இந்த புகாரை அப்போதே அவர் மறுத்திருந்தார். யாரோ ஒருவர் கூறும் அபாண்டமான புகாரை நம்பாதீர்கள் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட வழக்கில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக இந்த வழக்கில் நடிகை சோனாஷிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரணட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாகவும் செய்திகள் பரவின.
இதற்கு விளக்கம் அளித்துள்ள சோனாக்ஷி, எனக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த செய்தியை ஊடங்கள் சரிவர விசாரிக்காமல் வெளியிட்டுள்ளனர். இது போன்ற செய்திகள் வரும் போது சம்மந்தப்பட்டவரிடம் விசாரித்துவிட்டு ஊடகங்கள் செய்தியை வெளியிட வேண்டும். இது முற்றிலும் புனையப்பட்ட கதை. இந்த விவகாரத்தில் தனது வழக்கறிஞர் குழு சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது போன்ற வதந்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. பல ஆண்டுகளாக நான் பொறுமையை கடைபிடித்து வருகிறேன். என் நற்பெயரை கெடுக்கவும், என்னிடம் விளம்பரத்தைப் பெறவும், என்னிடம் பணம் பறிக்கவும் அந்த நபர் முயற்சிக்கிறார். இந்த வழக்கு முராதாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முராதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை இந்த விஷயத்தில் எனது கருத்து இதுதான், எனவே தயவுசெய்து என்னை அணுக வேண்டாம். நான் வீட்டில் இருக்கிறேன், எனக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.