ரஜினிகாந்திற்கு முதல் முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்த மதுரை ரசிகர் முத்துமணி இன்று காலை காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்த ரஜினி மதுரை வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது உலகம் அறிந்த நடிகராக புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவருக்கு தமிழகம் மட்டுமில்லாது இந்தியாவைத் தாண்டி கடல் கடந்தும் உலக நாடுகளிலும் ரசிகர் பட்டாளம் அதிகம். அதனால்தான், தற்போது அஜித், விஜய் போன்ற இன்றைய தலைமுறை நடிர்களுக்கு போட்டியாக அவரது படம் வியாபாரம் ஆகிறது. அவரது ஒவ்வொரு படத்தின் அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
இன்று இப்படி சினிமா உலகில் கொடிக்கட்டி பறக்கும் ரஜினிகாந்த் சினிமாவில் வில்லனாக அறிமுகமானபோது யாருக்கும் அவரைத் தெரியாது. அந்த நேரத்தில் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானபோதே, அவருக்கு மதுரையில் முதல் ‘ரஜினி ரசிகர் மன்றம்’ தொடங்கிய அவரைக் கொண்டாடியவர் முத்துமணி என்ற ரசிகர். அதுமட்டுமில்லாது தன்னுடைய செலவில் ரஜினி ரசிகர் மன்றம் முதன் முதலில் அமைத்து மதுரையில் பல்வேறு நற்பணிகளை முத்துமணி செய்து ரஜினியின் கவனத்தை கவர்ந்தார்.
தனக்காக முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய முத்துமணியின் திருமணத்தில் பங்கேற்று ரஜினி தாலி எடுத்து திருமணத்தை நடத்தி கொடுத்தார்.
அதனால், தன்னுடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மதுரை முத்துமணிக்கு ரஜினி மனதில் தனி இடம் உண்டு. தன்னுடைய முதல் ரசிகன் என்பதாலே ரஜினிகாந்த் 93ம் ஆண்டு மார்ச் 26ம் முத்துமணி திருமணத்தை தானே தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார். தயாரிப்பாளர்கள், இன்றைய உச்ச நட்சத்திரங்கள் கூட, ரஜினிகாந்த் சந்திக்க முன்கூட்டியே அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு அவரை சந்திக்க நேரம் கேட்பார்கள் ஆனால், சாதாரண ரசிகரான மதுரை முத்துமணி நினைத்தாலே சென்னை சென்றோ அல்லது அவர் ஷூட்டிங் நடக்கும் நடத்திற்கு சென்று அவரை சந்திக்கக்கூடியவர்.
அதனால், தென்மாவட்ட ரஜினி ரசிகர்கள் மத்தியில் மதுரை முத்துமணிக்கு தனி மரியாதை உண்டு. உடலில் தெம்பு இருந்த வரை தன்னுடைய வருமானத்தை ரஜினி ரசிகர் மன்ற பணிகளுக்காக செலவிட்ட மதுரை முத்துமணி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டபோது மருத்துவமனை செலவுக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டார்.
அதை அறிந்த ரஜினிகாந்த் முத்துமணியை சென்னைக்கு அழைத்து தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து அவரது சிகிச்சைக்கு தேவையான உதவிகள செய்தார். மேலும், போன் செய்து அவரது குடும்பத்தினரிடம் பேசி தைரியம் கொடுத்தார். அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளையும் ரஜினிகாந்த் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதமாக உடல்நலகுறைவால் வீட்டிலே முடங்கிக் கிடந்த முத்துமணி இன்று காலை காலமானார். இறந்த முத்துமணிக்கு லட்சுமி என்ற மனைவியும், சாய் ஹரிணி என்ற ஒரே மகளும் உள்ளனர். மகள் சாய் ஹரிணி ப்ளஸ்-டூ படித்து வருகிறார்.
முத்துமணி இறுதிச்சடங்கு இன்று மாலை மதுரை தத்தனேரி மயானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து அஞ்சலி செலுத்த ரஜினிகாந்த் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன.