திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை சமூக வலைத்தளத்தில் திருமணம் முடித்து, உல்லாசம் அனுபவித்து வந்த இளைஞன் கொலை செய்துள்ளார்.
24 வயதான காயத்திரி என்ற பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தின், திருவனந்தபுரத்திலுள்ள, தம்பனூரில் உள்ள ஹொட்டல் அறையில் காயத்திரியின் சடலம் கடந்த 5ஆம் திகதி நள்ளிரவு மீட்கப்பட்டது.
ஹொட்டல் நிர்வாகத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் அங்கு சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று சடலத்தை மீட்டனர்.
கொலை செய்யப்பட்டிருந்தவர் கட்டக்கடையைச் சேர்ந்த காயத்திரி என அடையாளம் காணப்பட்டார். விசாரணையை ஆரம்பித்த பொலிசார் முதலில் கண்டறிந்த தகவல், காயத்திரி அறைக்குள் உயிரிழந்திருக்கிறார் என்ற தகவலை ஒரு ஆண் தொலைபேசி வழியாக ஹொட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்திருந்தார்.
தகவல் வழங்கப்பட்ட இலக்கம், காயத்திரியின் தொலைபேசி இலக்கம்.
காயத்திரியுடன் தங்கியிருந்த நபரே, அவரை கொன்ற பின் தொலைபேசியை எடுத்துச் சென்று, ஹொட்டல் நிர்வாகத்திற்கு தகவல் வழங்கியிருக்கிறார் என்பதை ஊகித்த பொலிசார், அவரை அடையாளம் காணும் பணியில் இறங்கினர்.
காயத்திரியுடன் தங்கியிருந்த பின் தலைமறைவானவர், கொல்லம், பரவூரைச் சேர்ந்த பிரவீன் என்பது கண்டறியப்பட்டது. அவரை பொலிசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த 5ஆம் திகதி காலை 10.30 மணியளவில் பிரவீன் தனது அடையாள அட்டையை கொடுத்து அறையை பதிவு செய்தார். சற்று நேரத்தில் பெண்ணொருவர் வருவார் என்ற தகவலை கொடுத்து விட்டு, அறைக்கு சென்று விட்டார். சற்று நேரத்தில் காயத்திரியும் விடுதிக்கு வந்தார். அறை எண் 107 இல் தங்கியிருந்தனர்.
இதன்போதே கொலை நடந்தது.
பிரவீன் ஆரம்பத்தில் பேருந்து நடத்துனராக இருந்தவர். இதன்போது அவருக்கு காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர். அந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 5 வயது ஆண் குழந்தைம், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
பின்னர், பிரபலமான நகைக்கடையில் சாரதி வேலை அவருக்கு கிடைத்தது.
அங்கு வரவேற்பாளினியாக வேலை செய்த காயத்திரியுடன் நெருங்கிப்பழகினார். விரைவில் இருவரும் காதல் வசப்பட்டனர். தனக்கு திருமணமான விடயத்தை அவர் காயத்திரியிடம் சொல்லவில்லை.
அருகிலுள்ள தங்கும் விடுதியொன்றிலிருந்தே காயத்திரி வேலைக்கு வந்து சென்றார். காதல் வசப்பட்ட பின்னர், வேலை முடிந்த பின்னர் பிரவீனும் அங்கு சென்று தங்கத் தொடங்கினார். இருவரும் திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்தனர். எனினும், அதில் காயத்திரிக்கு விருப்பமிருக்கவில்லை. தன்னை திருமணம் செய்யுமாறு தொடர்ந்து நச்சரித்து வந்தார்.
காயத்திரியின் நச்சரிப்பு அதிகரிக்கவே, கடந்த ஒரு வருடத்தின் முன்னர், தேவாலயமொன்றில் காயத்திரிக்கு, பிரவீன் தாலி கட்டினார். எனினும், அது பற்றிய அவர்கள் யாருக்கும் சொல்லவில்லை. சக பணியாளர்களிற்கோ, குடும்பத்தினருக்கோ அது தெரியாது.
ஆனால், எப்படியோ பிரவீனின் முதல் மனைவி இதனை அறிந்து விட்டார். பரவூர் பொலிசாரிடம் முறையிட்டார். அத்துடன், காயத்திரியின் குடும்பத்தினர், நகைக்கடை நிர்வாகத்திடமும் முறையிட்டார்.
நகைக்கடை நிர்வாகம் உடனடியாக காயத்திரியை வேலையிலிருந்து நீக்கியது.
அவர் அதன்பின்னர் உடற்பயிற்சிக்கூடமொன்றில் பயிற்சியாளராக வேலை செய்தார். ஆனால் இருவரின் உறவும் நீடித்தது.

இதற்குள், தமது கள்ளகாதல் உறவை பகிரங்கப்படுத்திய கோபத்தில், கடந்த 6 மாதங்களாக மனைவியின் வீட்டுக்கே அவர் செல்லவில்லை.
நகைக்கடை நிர்வாகம் பிரவீனிற்கும் இடமாற்றம் வழங்கியது. தமிழகத்தின் திருவண்ணாமலையிலுள்ள தமது கிளைக்கு அவரை இடமாற்றம் செய்தது.
இதன் பின்னரே பிரவீன் புதியதொரு முடிவெடுத்தார். காயத்திரியுடனான உறவை துண்டித்து, முதல் மனைவியை சமரசம் செய்து, அவருடன் சேர்ந்து வாழ நினைத்தார். இது பற்றி காயத்திரியிடம் கூறிய போது, அவர் மறுத்து, கடுமையாக சண்டையிட்டார். திருவண்ணாமலைக்கு தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுமென விடாப்பிடியாக நின்றார்.
இடமாற்றம் பெற்றுச்செல்லும் பிரவீனுக்கு அவரது சக ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பிரியாவிடை வழங்கினர். அன்று இரவு தனது தங்குமிடத்திற்குத் திரும்பாமல் சக ஊழியரின் இடத்தில் தங்கினார்.
காயத்திரி தொலைபேசியில் தொடர்ந்து சண்டையிட்டதை தொடர்ந்து, சனிக்கிழமை காலை பிரவீன் ஹொட்டலுக்குச் சென்றார். காயத்திரியை ஹொட்டலுக்கு அழைத்தார்.
தற்போது பொலிசாரின் பிடியிலுள்ள பிரவீன், காயத்திரியை கொல்லும் நோக்கத்துடன் ஹொட்டல் அறைக்கு அழைக்கவில்லையென்றும், வாய்த்தர்க்கம் உச்சமாகி, ஆத்திரமிகுதியில் கொலை செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
காயத்திரி வந்த பின்னர், சுமுகமாக இருவரும் பிரிவதைப் பற்றி தெரிவித்ததாகவும், ஆனால் காயத்திரி அதை மறுத்து, திருவண்ணாமலைக்கு தன்னையும் அழைத்துச் செல்ல வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த சர்ச்சைகளிற்கிடையில் காயத்திரி தமது திருமணப் புகைப்படங்களை முதல்முறையாக அந்த அறைக்குள்ளிருந்தபடி வட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார்.
முரண்பாட்டை தொடர்ந்து, காயத்திரியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளர்.
இந்த கொலையை தற்கொலையாக மாற்றும் முயற்சியிலும் பிரவீன் ஈடுபட்டார்.
மாலை 5 மணியளவில் அறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, தனது நண்பர் ஒருவரின் தங்குமிடத்திற்கு சென்றுள்ளார்.அன்று இரவு தனது நண்பர்களுடன் தங்கினார்.
கொலையை தற்கொலை முயற்சியாக மாற்றும் நோகத்தில், காயத்திரியின் தொலைபேசியை எடுத்துச் சென்றுள்ளார். காயத்திரியின் உறவினர்கள் அழைப்பை ஏற்படுத்திய போது அவர்களுடன் சாதாரணமாக உரையாடினார்.
காயத்ரியின் வட்ஸ்அப் ஸ்டேட்டஸையும் அவர் தனது ஃபேஸ்புக் கணக்கில் ‘லவ் யூ’ என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.
அன்றிரவு அவர் ஒரு சட்டத்தரணியை சென்று சந்தித்து, ஆலோசனை கேட்டார். அவரை உடனடியாக பொலிசில் சரணடையுமாறு சட்டத்தரணி வற்புறுத்தினார். இதையடுத்து, இரவு 12.30 மணியளவில் விடுதிக்கு போன் செய்து, அறையில் காயத்ரியின் உடல் கிடப்பது குறித்து தெரிவித்தார்.
அப்போதுதான் விடுதி ஊழியர்களுக்கு அந்த பெண் அறையில் தனியாக இருப்பது தெரிந்தது. அறை வெளியில் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
காயத்திரியிக் காதலன் பிரவீனை அடையாளம் கண்ட பொலிசார், அவரது தொலைபேசி சிக்னல்களை கண்காணித்தனர். அவர் நள்ளிரவு 12 மணிக்கு பரவூரில் தொலைபேசியை ஓன் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பொலிசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் தனது சட்டத்தரணியுடன் போலீஸ் நிலையத்தில் சரணடைய வந்தபோது, நடுவழியில் வழிமறித்து, அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.