தைவானிய ஒலிம்பிக் வேகச் சறுக்கு (Speed Skater) வீராங்கனை ஹுவாங் யு-டிங் பயிற்சியின்போது சீன அணியின் உடையை அணிந்ததற்காகத் தண்டிக்கப்படவிருக்கிறார்.
தைவானியப் பிரதமர் அதன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
சீனா, தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. அத்துடன் அவ்வப்போது போர் விமானங்களையும், குண்டுவீச்சு விமானங்களையும் தைவானிய வட்டாரத்தில் பறக்கவிட்டு அச்சுறுத்துகிறது.
இத்தகைய சூழலில், சீனா, தைவான் இரண்டின் சின்னங்களும், சீருடைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் தைவான் சார்பில் கலந்து கொண்ட 4 பேரில், ஹுவாங் யு-டிங்கும் ஒருவர்.
இவர், கடந்த மாதம் 23ஆம் திகதி, சீன உடையில் பயிற்சி செய்யும் காணொளியைத் தமது சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு தைவானில் பரவலான எதிர்ப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, காணொளியை நீக்கி மன்னிப்பும் கேட்டார்.
ஹுவாங் பின்னர் பேஸ்புக்கில் “விளையாட்டு என்பது விளையாட்டு” என்று தன்னைத் தற்காத்துக் கொண்டார்.
“விளையாட்டு விளையாட்டாக இருக்கட்டும். விளையாட்டு உலகில், தேசியம் இல்லை, ஏனென்றால் நாங்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்கள்,” என்று ஹுவாங் எழுதினார்.
அந்தக் கருத்துக்கள் தைவானில் அவர் மீது மேலும் கோபத்தைத் தூண்டின.
ஒரு அறிக்கையில், ஹுவாங்கின் நடவடிக்கைகள் “மிகவும் பொருத்தமற்றவை” என்று பிரதமர் நம்புவதாகவும், அவரை விசாரித்து “தகுந்த தண்டனை” வழங்குமாறு கல்வி அமைச்சகம் மற்றும் அதன் கீழ் உள்ள விளையாட்டு நிர்வாகத்திடம் கேட்டுள்ளதாகவும் பிரதமர் சு செங்-சாங்கின் அலுவலகம் தெரிவித்துள்ளது.