முக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்திற்கு எதிரான வழக்கின் மூலம் தமிழ் அரசியல் கைதிகளே பாதிப்படைவார்கள்: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் திருத்த வரைபிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூலம், தற்போது சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள். இந்த வழக்கு வெற்றியடைந்தால், முன்னர் இருந்த மோசமான பயங்கரவாத தடைச்சட்டமே அமுலில் இருக்கும் என எச்சரித்துள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவருமான கே.வி.தவராசா.

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். என்றாலும், பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கும் சூழல் இல்லாத சமயத்தில், புதிய திருத்தத்தில் சாதகமான அம்சங்களும் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

42 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து இல்லை. என்ன காரணத்திற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அது 2009 இல் முடிவடைந்த பின்னரும் சட்டம் நீக்கப்படவில்லை. திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இது அடிப்படை உரிமைகளிற்கு முரணானது. சர்வதேச சமவாயத்திற்கும், அரசியலமைப்பின் பல உறுப்புரிமைகளிற்கும் முரணானது.

இந்த சட்டத்தை அரசு சுயநலத்திற்காகவே பயன்படுத்தி வருகிறது. அரசுக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பவர்களே இப்பொழுது குறிவைக்கப்படுகிறார்கள்.

தமிழர்களிற்கு எதிராக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இப்பொழுது தமிழ் பேசும் இனத்திற்கு எதிராக பாய்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி தற்போது நடக்கும் கையெழுத்து போராட்டம் வரவேற்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் இந்த சட்டம் நீக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தின் மூலம், முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லையென்பது உண்மை. ஆனாலும் இன்னொரு வாதத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

தற்போதுள்ள விதிகளின் கீழ் 18 மாதம் ஒருவரை தடுத்து வைக்கலாம். குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பெறவே தடுத்து வைக்கிறார்கள். குற்றப்பத்திரம் தாக்குதல் செய்யும் போது, குற்றஒப்புதல் வாக்குமூலம்தான் பிரதான சாட்சியாக முன்வைக்கப்படும். 95 வீதம் இதுதான் நடந்தது. 400 இற்கும் மேற்பட்ட அடிப்படை மனுக்களை எனது துணைவியார் கௌரிசங்கரி தாக்கல் செய்தார். அதில் 250 வழக்குகள் சித்திரவதைகள் தொடர்பானவை.

குற்றஒப்புதல் வாக்குமூலத்திற்காகத்தான் தடுப்புகாவலில் வைக்கிறார்கள். நீதிபதிகள் வழக்கை விசாரிக்கலாம். தண்டிக்கலாம் அல்லது விடுவிக்கலாம். பிணை வழங்கும் அதிகாரமில்லை.

புதிய திருத்தத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 மாதங்களிற்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். தடுத்து வைக்கப்படும் காலம் 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாகியதில் எந்த பலனுமில்லை. ஆனால், இந்த திருத்ததிலுள்ள சில நன்மைகளையும் குறிப்பிட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்திற்கு எதிராக இரண்டு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் இப்போது தாக்கல் செய்துள்ளனர். அம்பிகா சற்குணநாதனும், பாக்கியசோதி சரவணமுத்துவும் அவற்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், அடிப்படை உரிமைகளிற்கு எதிராக இந்த திருத்தம் உள்ளதால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையினாலோ, சர்வஜன வாக்கெடுப்பினாலோ இந்த சட்டம் நிறைவேற்றப்படா விட்டால், இது நடைமுறைக்கு வராது.

இந்த சட்ட திருத்தம் சட்டமாகவில்லையென்றால், அதனால் அரசியல் கைதிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் இரண்டு விடயங்கள் உள்ளன. தடுப்புக்காவல் காலமும், சிறைச்சாலையில் தடுத்து வைக்கும் காலமும் உள்ளன. தற்போதைய திருத்தத்தின்படி நீதிபதி தடுப்புக்காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட வேண்டும்.

கைதானவர் தாக்கப்பட்டிருந்தாலும், அது வழக்கு தீர்ப்பில் சாதகமான நிலைமையை ஏற்படுத்தும். தடுப்புக்காவல் காலத்தில்தான் சித்திரவதை செய்யப்பட்டு குற்றஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுகிறது. தடுப்புக்காவலில் எமது வாடிக்கையாளர் தாக்கப்பட்டது தெரிய வந்தால், நாம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து, தடுத்து வைக்கப்பட்டவரை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த கோருவோம்.

அதில், தாக்கப்பட்டது உறுதியானால், வழக்கு தீர்ப்பில் அது செல்வாக்கு செலுத்தும். இப்படி எத்தனையோ வழக்குகளில் வெற்றியடைந்துள்ளோம்.

புதிய திருத்தத்தின்படி, தடுப்புக்காவலில் இருக்கும் போதே நீதிபதியிடம் முறையிட வாய்ப்பு ஏற்படும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் இருந்து இன்று வரையான 42 வருடங்களில்,  நீதிமன்றங்களிற்கும், நீதிபதிகளிற்கும் பிணை வழங்கும் அதிகாரம் இருக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சரினால் தடுப்பு காவல் உத்தரவு வழங்கப்படுகிறது. சட்டமா அதிபரின் சம்மதமின்றி நீதிமன்றங்களினால் பிணை வழங்கமுடியாது.

42 வருட பயங்கரவாத தடைச்சட்ட வரலாற்றில் 3 வழக்குகளில்தான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 1999 ஆம் ஆண்டு – தற்போதைய கப்பிடல் ரிவியின் நிர்வாக இயக்குனர் பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர், 2021ஆம் ஆண்டு ரிசாத் பதியுதீனின் சகோதரர்
பிணையில் விடுவிக்கப்பட்டார். தற்போது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த மூன்று வழக்குகளையும் தாக்கல் செய்தவர் கௌரி சங்கரி தவராசா.

இப்பொழுது மேல் நீதிமன்றத்திற்கும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பிணை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கைதாகி 12 மாதங்கள் முடியும் நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தால், பிணை வழங்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, ஒரு வருடத்திற்குள் வழக்கை விசாரிக்காவிட்டால் , பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு தொடங்கினால் அவரை மீண்டும் சிறையில் வைக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் விசாரணைக்கு கால எல்லை இருக்கவில்லை. முன்னர் ஒருவரை கைது செய்தால் 5,6 வருடங்களாகும் விசாரணை முடிய. அதன்பின்னர் சட்டமா அதிபருக்கு கோவை அனுப்பப்பட்டு, வழக்கு தாக்கல் செய்ய 5, 6 வருடங்களாகும். அதன்பின்னர் வழக்கு விசாரணை முடிய மேலுமொரு 5 வருடமாகும். ஒருவருக்கு விடுதலையோ, தண்டனையோ கிடைக்க 15, 18 வருடங்களாகிறது.

தற்போதைய புதிய திருத்தத்தின்படி, வழக்கு விசாரணை தினசரி நடத்தப்பட வேண்டும். வரலாற்றிலேய தினசரி நடந்த ஒரேயொரு வழக்கு, 1982ஆம் ஆண்டு குட்டிமணி, தங்கத்துரை, தேவனிற்கு எதிரான வழக்கு. இதுதான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் வழக்கு. 4 மாதங்களில் வழக்கு முடிந்தது.

தற்போதைய நிலையில் புதிய திருத்தத்தின் மூலம் 2 வருடங்களிற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும்.

பத்திரிகையாளர் திசநாயகம் கடத்தப்பட்ட வழக்கில் ஒரு சம்பவம் நடந்தது. அவருடன் கடத்தப்பட்ட யசிகரன், வளர்மதியும் கைது செய்யப்பட்டனர். இதில் யசிகரன் தாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், நாம் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். யசிகரன், வளர்மதியும் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டனர். திசநாயகம் தாக்கப்பட்டார். ஆனால் அமைதிகாத்தார். வழக்கில் யசிகரனும், வளர்மதியும் விடுதலையாகினர். அவர்கள் சுவிற்சர்லாந்து சென்று விட்டனர். திசநாயகத்திற்கு 20 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பிலேயே விடுதலையாகி அமெரிக்கா சென்றார்.

2009 ஆம்ஆண்டிற்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்களும், பின்னர் கைதான ஒரு சிலரும் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் உள்ளனர். அந்த வகையான 49 பேர் உள்ளனர். இவர்களில் 26 பேர் தண்டனை பெற்றவர்கள். 23 பேர் விசாரணையில் உள்ளனர்.

2017ஆம் ஆண்டு சுமந்திரனை கொல்ல முயன்றதாக 19 பேர் கைதாகினர். பின்னர் விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாக பேஸ்புக்கில் எழுதினார்கள் என கைதானவர்களும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்திலும் 300 பேர் வரையில் கைதாகினர். தற்போது 375 – 400 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பொழுது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக பேசும் தமிழ் தலைவர்கள் 2015ஆம் ஆண்டு அரசின் பங்காளிகளாக இருந்தனர். அப்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பொழுது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கியிருக்கலாம் என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நேற்று 180 உயிரிழப்புக்கள்!

Pagetamil

ஜனாதிபதியின் அதிகாரங்களை வலுப்படுத்துகிறது?: ரணிலின் 21வது திருத்தத்திற்கு அதிகரிக்கும் எதிர்ப்பு!

Pagetamil

மட்டக்களப்பு- திருகோணமலை வீதியை மறித்து மக்கள் போராட்டம்: தொடரும் பதற்றம் (VIDEO)

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!