பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் என எம்.ஏ.சுமந்திரன் மேற்கொள்ளும் நடவடிக்கை, இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில், இளைஞரணியினர் கையெழுத்து இயக்கத்தை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், இளைஞரணியினருக்கு தெரியாமலே, சுமந்திரன் அணி கையெழுத்து முயற்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
நாளை பிரதான தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் அரசியல் கருத்தரங்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், அதற்கு ‘போட்டியாக’- நாளை யாழ்ப்பாணத்தில் கையெழுத்து இயக்கம் என எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
எனினும், நாளை யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை நடக்குமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி திட்டமிட்டிருக்கவில்லை.
கடந்த மாத இறுதியில் வவுனியாவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடந்த போது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கையெழுத்து வேட்டை நடத்துவதென்றும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி அதனை முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், எம்.ஏ.சுமந்திரன் தரப்பு முல்லைத்தீவு சென்ற போது, முறையாக கட்சிக்குள் கலந்துரையாடப்படாமல், திட்டமிடல்கள் இன்றி- கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்தது. இளைஞர் அணியின் தலைவர் கி.சேயோனும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இளைஞரணியின் நிகழ்ச்சி திட்டத்தை சுமந்திரன் அணி கைப்பற்றிய போது, அதன் சாட்சியாகத்தான் சேயோன் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.
இதன்பின்னர், கிளிநொச்சி இளைஞர் அணியினர் தமக்கு பொருத்தமான நேரம் அமைந்துள்ளதாக இளைஞர் அணிக்குள் குறிப்பிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கத்தை கிளிநொச்சியில் நடத்தினார்கள்.
இதன் பின்னர் ஏனைய இடங்களில் நடத்துவது பற்றிய இறுதி தீர்மானம் எட்டப்படாமல் இருந்தது. எந்த மாவட்டத்தில் தொடங்குவது, எந்த மாவட்டத்தில் முடிப்பது என்பது தொடர்பில் இளைஞர் அணி இன்று (15) மதியம் வரை இறுதித்தீர்மானம் எடுக்காமல் இருந்தது.
இந்தநிலையிலேயே, பொதுஅமைப்பொன்றின் பெயரில், கொழும்பில் கையெழுத்து இயக்கத்திற்கான அழைப்பை எம்.ஏ.சுமந்திரன் விடுத்தார்.
அது தனியே சுமந்திரன் அணியின் நிகழ்வாகவே இருந்தது. தமிழ் அரசு கட்சியின் நிகழ்வாக கூட இருக்கவில்லை.
இந்த நிலையிலேயே, யாழ்ப்பாணத்தில் கையெழுத்து இயக்கம் நாளை (16) நடைபெறுமென எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார்.
இந்த தகவல் எம்.ஏ.சுமந்திரன் அணியினால் அறிவிக்கப்படும் வரை, கையெழுத்து இயக்கத்தை திட்டமிடும் இளைஞர் அணியின் பிரமுகர்கள் யாருக்கும் இது பற்றி தெரியாது.
சுமந்திரனின் வழக்கமான வில்லங்க அரசியல் நகர்வின் பிரகாரம், நாளை யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகளின் அரசியல் கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக கருதலாம்.
அப்படியல்லாமல், வெளிப்படையான நோக்கங்கள் இருந்திருப்பின், கையெழுத்து இயக்கத்தை திட்டமிட்ட இளைஞர் அணி தரப்பிடமே அதனை விட்டிருப்பார்கள்.
நாளை கையெழுத்து இயக்கம் நடைபெறவுள்ளதாக இன்று அறிவிக்கும் வரை கணிசமான யாழ் மாவட்ட கட்சிப் பிரமுகர்கள் அறிந்திருக்கவில்லை.
இன்று மதியத்திற்கு அண்மையாகத்தான் இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணியினருக்கும் விடயம் தெரியும். ஆனால் அது கட்சியின் இளைஞர் அணியினால் வழங்கப்பட்ட தகவலல்ல. எம்.ஏ.சுமந்திரன் அணியினால் வழங்கப்பட்ட தகவல்.
இதன் பின்னரே கட்சியின் யாழ் மாவட்ட பிரமுகர்களிற்கும், இளைஞர் அணியினருக்கும் யாழ் மாவட்ட இளைஞர் அணியினர் தகவல் கொடுத்து வருகின்றனர்.
16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து இயக்கத்தை நடத்துவதென, நேற்று முன்தினம் (14) சுமந்திரன் தரப்பு முடிவு செய்துள்ளது. அது பற்றிய கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு அன்றே தகவல் கொடுத்தனர்.
ஆனால், 16ஆம் திகதி தமது அரசியல் கலந்துரையாடல் நடக்குமென தமிழ் கட்சிகள் கடந்த 10ஆம் திகதியே அறிவித்து விட்டனர்.
தமிழ் கட்சிகள் கூட்டாக கையெழுத்திட்ட ஆவண முயற்சியை குழப்புவதில் கடைசி நிமிடம் வரை சுமந்திரன் தீவிரமாக செயற்பட்டார். ஆனால் அது வெற்றியளிக்கவில்லை. இந்த பின்னணியிலேயே நாளை, யாழ்ப்பாணத்தில் கையெழுத்து இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் தரப்பு கையெழுத்து இயக்கத்தை நடத்துவதில், கட்சிக்குள் கணிசமான எதிர்ப்பு உள்ளது. இதை சமாளிக்க, இளைஞர் அணியின் மூலம் கட்சிக்காரர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இளைஞர் அணியினரின் மூலம் – கட்சியாக முன்னெடுக்கப்பட திட்டமிட்ட கையெழுத்து போராட்டத்தை, ஒரு குழு கையிலெடுத்தது இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் கடுமையான கொந்தளிப்பை கிளப்பியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி மேற்கொள்ளப்படும் முயற்சி வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் அந்த முயற்சியை அரசியல் சூழ்ச்சி நோக்கத்திற்காக பயன்படுத்தினால்… அந்த தரப்புக்களிற்கும் எந்த பலனும் கிடைக்காது. தமிழர்களிற்கும் பலனிருக்காது என்பதே கசப்பான யதார்த்தம்.