25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

பறிபோகும் ஆபத்தில் கொக்கிளாய் கிராம மக்களின் நிலங்கள்: கனிய மணல் அகழ்வுக்காக அளவீடு ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கிராம மக்களின் பூர்வீக நிலங்களை கனிய மணல் அகழ்வுக்காக அளவீடு செய்யும் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த வாரம் கொக்கிளாய் முகத்துவாரம் தொடக்கம் கொக்குத்தொடுவாய் வரையான மக்களின் விவசாய செய்கைக்காக பயன்படுத்தும் நிலங்கள் மற்றும் தோட்ட செய்கைக்கான நிலங்கள் குடியிருப்பு நிலங்கள் உள்ளடங்கலாக இவ்வாறு அளவீடு செய்யும் நடவடிக்கையினை நில அளவை திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளதாக கொக்கிளாய் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கொக்கிளாய் கிழக்கு பகுதியில் 16 பேருக்கு சொந்தமான 44 ஏக்கர் பூர்வீக காணிகளை எந்தவித முன்னறிவித்தலோ இழப்பீடோ வழங்காது கையகப்படுத்தி இல்மனைட் அகழ்வை ஆரம்பித்துள்ள கனிய மணல் கூட்டு தாபனம் தற்போது மேலும் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையாக இவ்வாறு முன்னறிவித்தல் எதுவுமின்றி தமது காணிகளை கையகப்படுத்தும் நோக்கோடு நில அளவை செய்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக கொக்கிளாய் கிழக்கு பகுதியில் சில வாரங்களுக்கு முதல் அறுவடை மேற்கொண்ட வயல் நிலங்கள் உள்ளடங்கலாக காணிக்குரிய ஆவணங்களை கூட வைத்துள்ளவர்களின் காணிகள் 60 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி இவ்வாறு கனிய மணல் கூட்டு தாபனத்துக்காக நில அளவை செய்து எல்லைப்படுத்த பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தமது காணிகளில் நில அளவீடு இடும்பெறுவதை அறிந்து அவ்விடத்துக்கு சென்ற காணி உரிமையாளர்களுக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் இது மேலிடத்து உத்தரவு இதற்க்கு அமையவே நாங்கள் அளவீடு செய்கின்றோம் . உங்கள் காணிகளாக இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை நாடுங்கள் என தெரிவித்துள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனிய மணல் அகழ்வுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த காணி சுவீகரிப்பு கொக்கிளாய் முகத்துவாரத்திலிருந்து கரையோரமாக கடல் கரையிலிருந்து சுமார் ஐந்நூறு மீற்றருக்கும் அதிகமான பகுதி கிராமத்தின் உள்ளே நீண்டு செல்வதோடு கொக்கிளாய் ,கருநாட்டுக்கேணி , கொக்குத்தொடுவாய் , நாயாறு , செம்மலை கிழக்கு வரை சுமார் 12 கிலோ மீட்டர்களுக்கு அதிகமான கரையோரப்பகுதிகள் வரை இவ்வாறு காணிகளை எதிர்வரும் நாட்களில் அளவீடு செய்து சுவீகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மாவலி எல் வலயம் மற்றும் சிங்கள மீனவ குடியேற்றம் இராணுவ காணி அபகரிப்பு வன திணைக்களம் ,வன ஜீவராசிகள் திணைக்களம் பௌத்த விகாரை அமைப்பதற்கான காணி பறிப்பு என பல்வேறு வகையில் இந்த கிராமங்களில் காணி அபகரிப்பு இடம்பெற்ற நிலையில் தற்போது கனிய மணல் கூட்டுதாபனமும் மக்களுக்கு சொந்தமான காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதை தமது இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடு என குறித்த கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் அழைப்பின் பேரில் காணி அளவீடு இடம்பெறும் கொக்கிளாய் பகுதிக்கு இன்றையதினம் (09) சென்ற முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்ததோடு அளவீடு செய்யப்பட்டுள்ள காணிகளையும் நேரில் சென்று பார்வியிட்டார். விரைவாக தான் பிரதிநித்துவப்படுத்தும் கட்சியின் உயர் மட்டத்துக்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்வதோடு இந்த காணி அபகரிப்பை தடுக்கும் விதமாக சட்ட நடவடிக்கைக்கு செல்லும் பொருட்டு நீதிமன்றை நாடுவதற்கு ஏற்பாடுகளை செய்வதாகவும் காணி உரிமையாளர்களோடு இணைந்து இந்த காணி அபகரிப்புக்கு எதிராக போராடவும் இணைந்து நிற்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், காணி உரிமையாளர்கள், கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கே .குமணன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

Leave a Comment