9வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் தொடக்க நாளான இன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்து கொண்ட தேனீர் விருந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், இன்று சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தொடக்கி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற சம்பிரதாயப்படி, தொடக்க அமர்வின் பின் சபாநாயகரினால் தேனீர் விருந்து வழங்கப்படும். ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் இதில் கலந்து கொள்வது வழக்கம்.
எனினும், இன்று கோட்டாபயவின் தேனீர் விருந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக புறக்கணித்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை விவகாரம், தீர்வு விடயம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இலங்கையில் இனப்பிரச்சனையென்ற எதுவுமேயில்லையென்பதை போல, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வதை போல, கோட்டாபயவின் உரை அமைந்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, இன்றைய தேனீர் விருந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்தது.
அத்துடன், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை நேரில் சந்தித்த இரா.சம்பந்தன், கடுமையான அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில், தீர்வு விடயம் குறிப்பிடப்படும் என ராஜபக்ச தரப்புடன் நெருக்கமாக உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலம் அரச தரப்பு தகவல் வழங்கியிருந்ததாகவும், அந்த தகவலின் அடிப்படையில் இரா.சம்பந்தனும் அதிக எதிர்பார்ப்பில் இருந்ததாக தெரிய வருகிறது.