தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனிற்கும் (பிள்ளையான்), மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையிலான மாநகரசபை உறுப்பினர்கள் சிலருக்குமிடையில் மூடிய அறையில் சந்திப்பு நடந்தது.
நேற்று (8) மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை இந்த சந்திப்பு நடந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரிற்கும், ஆணையாளரிற்குமிடையில் பனிப்போர் ஆரம்பித்து, இப்போது நேரடி மோதலாக மாறியுள்ளது.
அண்மையில் ஆணையாளர் தாக்கப்பட்டார்.
ஆணையாளர் எம்.தயாபரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானின் ஆதரவாளர். முதல்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர். இரண்டு கட்சிகளிற்குமிடையிலான உரசலே, மட்டக்களப்பு மாநகரசபையில் உரசலாக மாறியுள்ளது.
ஆணையாளரை பதவியிலிருந்து அகற்ற, முதல்வர் தரப்பு தலைகீழாக நடந்து பார்க்காத குறையாக முயற்சி செய்துவிட்டது. பலனில்லை. இதையடுத்து, சண்டைக்காரனின் காலிலேயே விழுவோம் என தீர்மானித்தே, நேற்று பிள்ளையானுடன் சந்திப்பை கோரியுள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் கருத்து தெரிவித்த போது-
‘மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் தரப்பினர் எம்மை சந்திக்க விரும்புவதாக மாநகர முதல்வர் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் நேற்று மாநகரசபைக்கு எமது தலைவர் பிள்ளையான் சென்றார்.
முதல்வர் தி.சரவணபவன் உள்ளிட்ட மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஐ.தேக உறுப்பினர்கள் என சுமார் 20 பேர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளரை மாற்றும்படி அந்த குழுவினர், பிள்ளையானிடம் கோரிக்கை விடுத்தனர். ஆணையாளரை மாற்றி உதவினால், நாம் அனைவரும் உங்களின் பின்னால் நிற்போம் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர்.
எனினும், அது பற்றி பிள்ளையான் எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை.
சபா மண்டபத்தின் சிசிரிவி கமராக்கள் மறைக்கப்பட்டிருந்ததை போல தென்பட்டது. எனினும், நாம் அதில் அக்கறை செலுத்தவில்லை’ என்றார்.
கூட்டம் நடைபெற்ற மாநகரசபை சபா மண்டபத்தின் சிசிரிவி கமரா ஏன் மறைக்கப்பட்டிருந்தது?, இப்படியொரு கூட்டத்திற்கு வருவதானால், சிசிரிவி கமரா இயங்கக்கூடாது என ஏதாவது நிபந்தனை உங்கள் கட்சியின் தரப்பிலிருந்து வைக்கப்பட்டதா என அந்த பிரமுகரிடம் தமிழ்பக்கம் வினவியது.
‘இல்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அப்படியொரு நிபந்தனையும் விதிக்கவில்லை. இது நாம் அழைத்த சந்திப்பல்ல. அவர்கள் எம்மை சந்திக்க விரும்பியதால் சென்றோம். இதில் எமக்கு ஒளிவுமறைவு ஏதுமில்லை. மண்டபத்தை அவதானித்த போது, சிசிரிவி கமராக்கள் மறைக்கப்பட்டிருந்ததை போல தென்பட்டது. அதை ஒரு விவகாரமாக்கவில்லை’ என்றார்.