13வது திருத்தத்தை முழுமையாக – உடனடியாக அமுல்ப்படுத்தக் கோரும், தமிழ் கட்சிகளின் கூட்டு ஆவணத்தில் தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. தமிழ் அரசு கட்சியின் குழப்பம், இழுபறிகளின் பின்னர், இப்பொழுது ஆவண தயாரிப்பு முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனேகமாக செவ்வாய்க்கிழமை இந்திய தூதரிடம் கையளிக்கப்படும்.
இன்று சனிக்கிழமைதான் ஆவணத்தை கையளிக்க இரா.சம்பந்தன் விரும்பினார். எனினும், இந்திய தூதர் கோபால் பாக்ளே கொழும்பிற்கு வெளியில் தங்கியிருப்பதால், செவ்வாய்க்கிழமை ஆவணம் கையளிக்கப்படம்.
தமிழ் தேசிய பரப்பிலுள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் இதில் கையெழுத்திடவுள்ளன. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இன்னும் கையெழுத்திடவில்லை. திங்கள்கிழமை கொழும்பு சென்று கையொப்பமிடுவார்.
இந்த ஆவண தயாரிப்பு முயற்சியையொட்டி பல சுவாரஸ்ய பின்னணி தகவல்கள் உள்ளன. பொருத்தமான தருணம் வரும் வரை அவற்றை வெளியிடாமல் இருந்தோம். இப்பொழுது ஆவண தயாரிப்பு பணிகள் யாவும் முடிந்து விட்டதால், இனி அவற்றை பகுதி பகுதியாக தரலாமென எண்ணியுள்ளோம்.
இந்த ஆவணத்தில் கையெழுத்திடுவதில் இரா.சம்பந்தன் ஆரம்பத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். காரணம், பழுத்த அரசியல்வாதியான அவருக்கு தெரியும்- இந்த முயற்சியின் பின்னணியில் இந்தியா இருப்பது.
ஏற்கனவே நரேந்திரமோடி அழைத்த போது, மகளின் கடவுச்சீட்டு தொலைந்து விட்டது என கொழும்பிலுள்ள இந்திய தூதருக்கு சொல்லி, அந்த பயணத்தையே இல்லாமல் செய்து விட்டார். தமிழ் அரசு கட்சியின் ‘பொறுப்பற்ற’ நடவடிக்கையால் இந்தியா கடுமையான அதிருப்தியடைந்தது.
அதனால்தான், கூட்டமைப்பின் கோரிக்கையை கணக்கிலேயே எடுக்காமல் விட்டு விட்டது. இப்போதைக்கு இந்திய பயணம் இல்லை. சிறிய இழுத்தடிப்பு செய்து, தமிழ் அரசு கட்சியினருக்கு கொஞ்சம் உறைக்க வைத்த பின்னரே இந்தியாவிற்கு அழைக்கப்படுவார்கள்.
ஏற்கனவே, இந்தியாவை அதிருப்தியடைய செய்து விட்டதால், இந்த கடிதத்தில் கையெழுத்திடாமல் விட்டு, மீண்டும் இந்தியாவை அதிருப்தியடைய செய்ய சம்பந்தன் தயாராக இருக்கமாட்டார்.
அதனால் ஆரம்பத்தில் ஆர்வமாக பங்கேற்றார்.
இந்த கூட்டங்களில் ஆரம்பத்தில் எம்.ஏ.சுமந்திரன் அழைக்கப்படவில்லை. பின்னரும் அழைக்கப்படவில்லை. இரா.சம்பந்தன் தன்னுடன் கூட்டிச் சென்றார்.
அதன்பின்னர் சம்பந்தனின் சுருதியில் சிறிய மாற்றம் நிகழ தொடங்கியது. இதற்கு பின்னர்தான், சம்பந்தன் சம்பந்தாசம்பந்தமில்லாமல் நிபந்தனைகள் வைத்து இழுத்தடிக்க தொடங்கினார்.
இரா.சம்பந்தனை ‘யாரோ’ குழப்பினார்கள் என்பது மட்டும் தெரிந்தது. அது யார் என்பதே இப்போது கேள்வி.
இதற்குள், ரெலோவின் பேச்சாளர் சுரேனை முன்னிறுத்தியும் சர்ச்சையை தோற்றுவிக்க தமிழ் அரசு கட்சி முயன்றது. சுரேன் தொடர்பில் எதிர்மறையான தகவல்கள் தமிழ் அரசு கட்சிக்குள் பகிரப்பட்டிருந்தது. இதுவும் இந்த ஆவண தயாரிப்பில் கடும் மோதல்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. அவற்றை பின்னர் தனியாக குறிப்பிடுகிறோம்.
குளோபல் டவர் ஹொட்டலில் 22ஆம் திகதி சந்திப்பு முடிந்து ஆவணமொன்று தயாரிக்கப்பட்டது. எனினும், அதிருந்து முஸ்லிம் தரப்புக்கள் பின்வாங்கின.
ரவூப் ஹக்கீமை எப்படியும் உள்ளீர்க்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்த மனோ கணேசன், பிறிதொரு ஆவணத்தை முன்வைத்தார். அதனடிப்படையில் ஏற்பாட்டாளர்களால் ஒரு ஆவணம் தயாரிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 31ஆம் திகதி இரா.சம்பந்தனின் வீட்டில் அவரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.
ஆவண தயாரிப்பு முயற்சி கூட்டங்கள் இரண்டில் பங்கேற்றுவிட்ட சம்பந்தன், 31ஆம் திகதி சந்திப்பின் தொடக்கத்தை வில்லங்கமாக தொடங்கினார்.
‘இப்பொழுது திடீரென இந்த முயற்சி ஏன் ஆரம்பிக்கப்படுகிறது. எனக்கு அதில் சந்தேகமுள்ளது’ என்றார்.
இதற்கு ஏற்பாட்டாளர்கள் தரப்பில் செல்வம் அடைக்கலநாதனும், த.சித்தார்த்தனும் விரிவாக விளக்கமளித்தனர்.
‘இந்த அரசாங்கம் மாகாணசபை முறைமையை விரும்பவில்லை. அதை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. நிர்வாக ரீதியாக ஏற்கனவே அதை ஆரம்பித்தவர்கள், அடுத்ததாக அரசியலமைப்பின் மூலம் அதனை இல்லாமல் செய்யப் போகிறார்கள். நீங்கள் (தமிழ் அரசு கட்சி) சமஷ்டியை கேட்டுத்தான் கட்சியை ஆரம்பித்தீர்கள். நாங்கள் எல்லோரும் தனிநாடு கேட்டு போராட்டத்தை தொடங்கியவர்கள். அதனால், 13வது திருத்தத்தில், மாகாணசபையில் உங்களை விட, எங்களிற்கு அதிகமான அதிருப்தி- விருப்பமின்மை உள்ளது.
ஆனால், இப்போதைய தமிழர் தரப்பின் பலம், அரசியல் சூழலின் அடிப்படையிலேயே நாம் முடிவுகளை எடுக்க வேண்டும். காணிகள் பறிக்கப்படுகிறது. குடியேற்றங்கள் நடக்கிறது. நிர்வாக அதிகாரங்கள் பறிக்கப்படுகிறது. இப்போது எங்கள் அனைவரதும் இறுதி இலக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகார பரவலாக்கல்தான். அதற்கு முயன்று கொண்டிருக்கும் போது, தற்காலிக ஏற்பாடாக – இருக்கும் நிலைமையை பாதுகாக்க 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி, தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அதன்மூலமே தமிழ் தேசியத்தினதும், தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அடித்தளத்தை பேண முடியும். அல்லது, இனப்பரம்பலை மாற்றியமைத்து, காணிகளை அபகரித்து, எம்மை பெரும் சிக்கலிற்குள் தள்ளி விடுவார்கள்.
இந்த நிலைமைகளை சமாளிக்க – இப்போதுள்ள அரசியலமைப்பு எமக்கு தந்துள்ள ஏற்பாடாக 13வது திருத்தம் உள்ளது. அதைவிட வேறு உடனடி தெரிவுகள் இருந்தால் நீங்கள் சொல்லலாம். நாங்களும் அதை ஏற்றுக்கொள்வோம்’ என்றனர்.
அதன் பின்னரே, இரா.சம்பந்தன் திருப்தியடைந்தார்.
இந்திய – இலங்கை உடன்படிக்கையை அமுல்ப்படுத்த கோருவதே தற்போதைக்கு சாத்தியமாக வழியென அவரும் ஆமோதித்தார்.
‘அண்மை நாட்களாக எனக்கு இருந்த சந்தேகமும் இப்போது தீர்ந்தது’ என குறிப்பிட்டார். அதன் பின்னரே ஆவணத்தில் கையெழுத்திட்டார்.